சனி, 19 ஜூன், 2021

தமிழ்நாட்டில் பணிமூப்பு, தகுதி-திறமை உள்ளோர் இருந்தும் எஸ்.சி., பி.சி., மற்றும் பெண்கள் புறக்கணிக்கப்படலாமா? - கி.வீரமணி

 உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கேள்விக்குறி?

தமிழ்நாட்டில் பணிமூப்பு, தகுதி-திறமை உள்ளோர் இருந்தும்  

எஸ்.சி., பி.சி., மற்றும் பெண்கள் புறக்கணிக்கப்படலாமா? - கி.வீரமணி

சமூகநீதி கானல் நீர் வேட்டைதானா? தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் இதுகுறித்து கோருவது அவசரம் - அவசியம்!

நீதித்துறை நியமனங்களில் குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது; பழிவாங்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

சமூகநீதிக்கு எதிரான நிலைமையே தொடர்கின்றது!

உச்சநீதிமன்றத்தில் ஏழு (7) இடங்கள் காலியாக - நிரப்பப்பட வேண்டிவைகளாக உள்ளன. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு - அதற்குரிய பிரதிநிதித்துவம் என்கிற வகையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளவர் எவருமிலர் என்பது எத்தகைய கொடுமையாகும்; இக்கொடுமை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கின்ற வேதனையான - சமூகநீதிக்கு எதிரானதாகவே நிலைமையே தொடர்கின்றது!

தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பிற மாநில உயர்நீதிமன்றங்களிலிருந்து, கல்கத்தா, அலகாபாத், டில்லி போன்ற வெளி உயர்நீதிமன்றங்களிலிருந்து மாற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சில காலம் பணியாற்றியவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் என்ற  தகுதிக் குறைவுதானா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 10.12.2015 இல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட  ஜஸ்டீஸ் திரு.ஆர்.சுதாகர்,  அவர்கள் 20.4.2007 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக அவர் (15.3.2017 இல்) மாற்றப்பட்டார். பிறகு, தற்காலிக தலைமை நீதிபதியாக (Acting Cheif Justice)  அவர் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு (16.3.2018 இல்) நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக (18.5.2018 இல்) நியமிக்கப்பட்டு இருந்தார். தலைமை நீதிபதியாக மூன்று ஆண்டுகள் பணியாற்றியும்கூட, இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பே இல்லாமல் ஆக்கப்பட்டு, 13.02.2021 இல் ஓய்வு பெற்றார். அவரது முக்கிய குறைபாடு அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் என்ற தகுதிக் குறைவுதானா என்று வழக்குரைஞர் வட்டாரங்களிலேயே பலரும் மனம் நொந்து கேள்வி கேட்கும் நிலை உள்ளது!

இதேபோல, 2005 இல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகி, பிறகு 2007 இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜஸ்டீஸ் திரு.பால் வசந்தகுமார் அவர்கள் 2.2.2015 இல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தற்காலிக நீதிபதியாக (Acting Cheif Justice) நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்றத்திற்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாகவோ, நியமனத் தகுதி பெற்றதாகவோ இல்லாமல் - பரிதாபமாக 2017 இல் (14.03.2017) ஓய்வு பெற்றார்.

சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், நியாயக் கண்ணோட்டத்தோடும்தான்!

அதேநேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தெலங்கானா (ஆந்திரா) உயர்நீதிமன்றத்திற்கு விருப்ப மாறுதல் பெற்றுச் சென்று சில காலம் பணியாற்றிய ஜஸ்டீஸ் திரு.ராமசுப்பிரமணியம் அவர்கள் - 2019 இல் (22.06.2019) இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமனம் பெற்று, மூன்றே மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனமாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தொடர்ந்து பணியாற்றுகிறார். (தனிப்பட்ட முறையில் மேற்சொல்லப்பட்ட எந்த நீதிபதிகள்மீதும் நமக்கு விருப்போ, வெறுப்போ வேண்டியவர், வேண்டாதவர் என்ற கண்ணோட்டமோ இன்றி, சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், நியாயக் கண்ணோட்டத்தோடும்தான் நாம் இதனைச் சுட்டிக்காட்டிக் கேட்கிறோம்).

இவரை, உச்சநீதிமன்ற பதவிக்குப் புறந்தள்ளப்பட்ட மூத்தவர்கள் - சீனியாரிட்டி ரேங்கில் பல எண்கள் உயர்ந்த மூத்தவர்கள் - பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளது நியாயந்தானா? என்ற குமுறல் எழுகிறது. நாம் முன்பே ஒருமுறை இதுபற்றி எழுதியுள்ளோம்.

எவர்மீதும் குரோதமோ, விரோதமோ கிடையாது!

நீதி அனைவருக்கும் கிட்ட வேண்டும். அதிலும் சமூகநீதிக்கு உச்சநீதிமன்ற நியமனங்கள் கலங்கரை வெளிச்சமாகத் திகழவேண்டும் என்ற ஒரே நோக்கம் தவிர நமக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது - எவர்மீதும் குரோதமோ, விரோதமோ கிடையாது!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான உண்மை பிரதிநிதித்துவம் என்பது ஒரு நீண்ட கால மரபு - நியாய அடிப்படையில், திறமை அடிப்படையில் கவனம் கொள்ளாது அதை அலட்சியப்படுத்தலாமா என்பதே நம் கேள்வி.

வெளி மாநிலங்களிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகி உச்சநீதிமன்றத்திற்கு உடனடியாக (உயர்த்தப்படுவது), நியமனங்கள் பெறுவது சென்னையின் பிரதிநிதித்துவமோ, சமூகநீதியோ ஆகுமா?

உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக பெண் நீதிபதி ஒரே ஒருவர் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டுக்கும் மேலாகியுள்ளது!

உச்சநீதிமன்றத்தின் 34 மொத்த இடங்களில் தற்போது காலியாக உள்ள 7 இடங்கள் தவிர, 27 பேரில் ஒரே ஒருவர் மட்டும்தான்; (பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி)  எஸ்.சி. பிரிவைச் சார்ந்தவர்.

மற்ற அத்துணை பேரும் (25 பேரும்) முன்னேறிய ஜாதியினரே - அதில் பலர் பார்ப்பனர்கள்; தலைமை நீதிபதி ஒருவர் பார்ப்பனரல்லாதார்! (ஆந்திராவைச் சேர்ந்தவர்).

தமிழ்நாட்டைச் சார்ந்த ஜஸ்டீஸ் திரு.ஆர்.சுப்பையா அவர்கள் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் முதன்மையானவர். 2008 முதல் 13 ஆண்டுகால நீதிபதியாக பணியாற்றிய பழுத்த அனுபவம் உடையவர்.

அவருக்கு ஒரு தலைமை நீதிபதி நியமன வாய்ப்போ அல்லது உச்சநீதிமன்ற வாய்ப்போ இன்றுவரை வந்ததாகத் தெரியவில்லை - எந்த குறைபாடுகளும் சொல்ல முடியாத நேர்மைக்குப் பெயர் போனவர்.

இவர் வருகிற 21.6.2021 இல் - இன்னும் மூன்று நாள்களில் ஓய்வு பெற இருக்கிறார். இதுவரை இவருக்கு எந்த உயர் நியமன வாய்ப்பும் (தலைமை நீதிபதி - உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதி வாய்ப்போ) வந்ததாகத் தெரியவில்லை!

இவருக்கும் ஒரே ஒரு தகுதிக் குறைவு - இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, உழைப்பால், தகுதியால் உயர்ந்தவர் என்பதுதானா?

அதுபோல, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த மூத்த நீதிபதியான ஜஸ்டீஸ் திரு.மணிக்குமார் அவர்கள், கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஓராண்டு 18 மாதங்கள் ஆகின்றன. இவர் எஸ்.சி. பிரிவைச் சார்ந்தவர். சிறப்பான முறையில் பல தீர்ப்புகளை வழங்கி வருபவர். இவருக்காவது  உச்சநீதிமன்ற வாய்ப்புக் கிட்டுமா என்பதும் தெரியவில்லை?

12 ஆண்டுகள் கனிந்த அனுபவமும், சட்ட ஞானமும் உடையவர் நீதிபதி கிருபாகரன்!

அதுபோல, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல அரிய - சமூகநலக் கண்ணோட்டத்தோடு தீர்ப்புகள் வழங்கிய - ஆழ்ந்த சட்ட அறிவும், நேர்மையும், அனுபவமும் உள்ள ஜஸ்டீஸ் திரு.கிருபாகரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குக் கூடுதல் நீதிபதியாக 2009 இல் (31.3.2009) நியமனம்; பிறகு 29.3.2011 இல் நிரந்தர நீதிபதியாகி, 12 ஆண்டுகள் கனிந்த அனுபவமும், சட்ட ஞானமும் உடையவர்.

அவருக்கு எந்த உயர் வாய்ப்பும் இதுவரை வந்ததாகவே தெரியவில்லை.

இவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். (இதுதான் அவருக்குத் தகுதிக் குறைவு போலும்!) இவருக்கு 21.8.2021 ஓய்வு பெறும் நாளாகும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் சமூக பன்முகத்தன்மை!

நாம் சில நாள்களுக்கு முன் விடுத்த அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளபடி, தற்போதுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூறினார்; ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் ஏற்கெனவே சமூகப் பன்முகத் தன்மைபற்றிக் (‘Social Diversity’)  குறிப்பிட்டார்.

நீதித்துறை நியமனங்களில் சமூகநீதி வெறும் கானல் நீர் வேட்டைதானா?

ஆனால் விளைவு...? ஒன்றும் இதுவரை கிட்டவில்லையே! நீதித்துறை நியமனங்களில் சமூகநீதி வெறும் கானல் நீர் வேட்டைதானா?

நம் மக்கள் பிரதிநிதிகளும் (எம்.பி.க்கள்), மாண்புமிகு முதலமைச்சரும் இதுபற்றி ஒன்றிய அரசிடம் கோருவது அவசரம், அவசியம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக