வெள்ளி, 18 ஜூன், 2021

கடற்கொள்ளை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பல் INS Trikand , ஐரோப்பிய யூனியன் கடற்படையுடன் முதல் முறையாக கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது.


 கடற்கொள்ளை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஐரோப்பிய யூனியன் கடற்படையுடன் முதல் முறையாக இன்று கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி ஏடன் வளைகுடா பகுதியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 4 நாடுகளைச் சேர்ந்த 5 போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

இத்தாலி கடற்படை கப்பல் ஐடிஎஸ் கராபினெரி, ஸ்பெயின் கடற்படை கப்பல் இஎஸ்பிஎஸ் நவாரா, பிரான்ஸ் கடற்படையின் 2 போர்க் கப்பல்கள், எப்எஸ் டானெரி மற்றும் எப்எஸ் சர்கஃப் ஆகியவை இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

இதில் வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் பயிற்சி உட்பட பல்வேறு போர்ப் பயிற்சிகள், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இதன் மூலம் இந்த 4 நாட்டு கடற்படைகள் ஒருங்கிணைந்த படையாக செயல்பட்டு அவற்றின் போர்த் திறன், கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை மேம்படுத்தப்படும்.

ஐரோப்பிய யூனியன் கடற்படையும், இந்திய கடற்படையும் தற்போது ஒன்றிணைந்து கடற்கொள்ளை தடுப்பு பணிகள் உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐ.நா உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செல்லும் கப்பல்களுக்கு இவை பாதுகாப்பு அளிக்கின்றன.  இவற்றின் மூலம் இந்திய கடற்படை மற்றும் ஐரோப்பிய யூனியன் கடற்படை இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக