செவ்வாய், 12 அக்டோபர், 2021

பல்கலைக் கழகங்களில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி! - கி.வீரமணி


 8 ஆம் தேதி நாம் வெளியிட்ட அறிக்கைக்குக் கைமேல் பலன்!

பல்கலைக் கழகங்களில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய

‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி! - கி.வீரமணி

பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் தமிழ்நாடு சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதில் உறுதியாக இருக்கக் கடமைப்பட்டவர்கள்

கடந்த 8.10.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உரிய கவனத்திற்கென, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில், ‘பயோடெக்‘ என்ற பாடப் பிரிவுகளில் (உயிரி தொழில்நுட்பம்) தமிழ்நாட்டிற்குரிய 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தைப் பின்பற்றாமல், ஒன்றிய அரசின் நிதி உதவி கிடைக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி, அவர்களது விதிமுறையை நடைமுறைப்படுத்தி, அந்தப் பல்கலைக் கழகங்கள் - தமிழ்நாடு அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக, வெறும் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டையே - ஒன்றிய அரசு திட்டத்தையே நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இடங்களைப் பறித்ததோடு, தேர்வானவர்களில் பெரும்பாலோர் வடமாநிலத்தவர்கள் - பிற மாநிலத்தவர்களே என அபகரித்துள்ள பட்டியலையே நாம் வெளியிட்டு விளக்கியிருந்ததோடு,

69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியானது

1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டு, எப்போதும் அமலில் உள்ள அரசு ஆணையில் ‘‘பல்கலைக் கழகங்கள் இதனை கட்டாயமாகக் கடைப்பிடிக்கவேண்டும்‘’ என்று உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். (அது எம்.ஜி.ஆர். ஆட்சியில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதத்தை 50 ஆக ஆக்கி, மொத்தம் 50 + எஸ்.சி., எஸ்.டி.,க்குரியது 18 ஆக 68 சதவிகிதமாகியது. அப்போது எஸ்.டி.,க்கு தனி ஒதுக்கீடு இல்லை; பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, கலைஞர் அரசில் ஒரு சதவிகிதம் இணைந்து 69 சதவிகிதமாகியது).

அதுவரை ஆணையாக (ஜி.ஓ.வாக) இருந்த இந்த இட ஒதுக்கீடு பிறகு தனிச் சட்டமாகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாகி, ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்புடன் கூடிய சட்டமாகக் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்குமேல் அமுலில் உள்ளது.

அப்படிப்பட்ட நீண்ட வரலாற்றை உள்ளடக்கிய 69 சதவிகித இட ஒதுக்கீட்டை (இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் இந்த வாய்ப்பைப் பெற்ற மாநிலம்; காரணம், இது பெரியார் மண் - சமூகநீதி மண்) மறைமுகமாக ஒழித்துக் கட்டவே, ‘‘நாங்கள் (ஒன்றிய அரசிலிருந்து) உதவித் தொகை கணிசமாகத் தருகிறோம் -  எங்கள் இட ஒதுக்கீடுப்படி, மாணவர்களைச் சேர்த்தால்’’ என்று விஷ உருண்டைக்குத் தேன் தடவித் தந்தால், இந்த குறிப்பிட்ட பல்கலைக் கழக துணைவேந்தர்கள் அதற்குப் பலியாகலாமா? இணங்கலாமா?

உடனடியாக நமது கோரிக்கை நிறைவேற்றம்

தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக் கழகத்தில் இதே பிரச்சினையில், அந்த நிபந்தனையை ஏற்க மறுத்துள்ள நிலையைப்பற்றி அறியமாட்டார்களா?

புதிய தி.மு.க. ஆட்சியின் சமூகநீதிக் கொள்கை - திட்டம்பற்றி தெரிந்து, அதன்படி முடிவு எடுத்திருந்தால், இந்த 19 சதவிகித (69-50=19) இட ஒதுக்கீடு காணாமற் போயிருக்குமா?

இதில் உடனடியாக நமது வேண்டுகோளை ஏற்ற -  நமது முதலமைச்சர்  ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ என்பது உண்மையானதாக உள்ளதால், நமது இயக்கக் கொள்கை, இலட்சியம்  என்ன என்பதை நன்கு உணர்ந்தவராகையால், ஒரு கணம்கூட தாமதிக்காமல், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களை அழைத்து, விரிவாக விவாதித்து, 69 சதவிகிதத்தையே அமுல்படுத்தவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியதோடு, இதனை ஒன்றிய அரசு ஏற்காவிடில், நிதி உதவியை அந்த மாணவர்களுக்கு (பயோடெக் படிப்பில் சேர்ந்து படிக்கும் 69 சதவிகித அடிப்படை மாணவர்களுக்கு) தமிழ்நாடு அரசேகூட அந்த நிதிப் பொறுப்பை ஏற்கக் கூடத் தயார் என்றும் உறுதிபடக் கூறியுள்ளது எவ்வளவு தெளிவான திட்டவட்டமானதாகும்.

அதை நேற்று (11.10.2021) செய்தியாளர்களிடையே உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெளிவுபடுத்திக் கூறி, 69 சதவிகிதத்தை தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் எல்லா படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்குப் பின்பற்றிடவேண்டும் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்!

ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி!

தூண்டில் போட்டு, மீனைப் பிடிப்பதுபோல், நிதி உதவி என்ற ஒன்றைக் காட்டி, 69 சதவிகித சட்ட உரிமையைப் பறிக்க நினைப்பதை -  தமிழ்நாடு அரசும், அதன் ஒப்பற்ற முதலமைச்சரும், அமைச்சரும் உடனடியாக புரிந்துகொண்டு சுட்டிக்காட்டிக் கூறியுள்ளதானது இந்த அரசு சமூகநீதியைக் காப்பதில் எவ்வளவு தலைசிறந்த அக்கறையோடு உள்ளது என்பதையே காட்டுகிறது.

இதில் மாநில உரிமையும் அடங்கியுள்ளது. கல்வி ஒன்றிய அரசு பட்டியலில் இல்லை. ஒத்திசைவுப் பட்டியலில்தானே இருக்கிறது. தமிழ்நாடு அரசின் உடனடி நடவடிக்கைக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், சமூகநீதிப் போராளிகள் சார்பில் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களின் முக்கிய கவனத்திற்கு...

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களே, அரசின் கொள்கை முடிவை அறிந்து, செயல்படுங்கள்; தமிழ்நாடு அரசு சட்டப்படிதான் அப்பல்கலைக் கழகங்களை அமைந்துள்ளன; நிதி உதவி உள்பட அனைத்தும் பெறுகின்றன என்பதையும் நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

இட ஒதுக்கீடு சமூகநீதி உயிர்ப் பிரச்சினை; இதில் விளையாடவேண்டாம்; அலட்சியமாய் இருந்து இட ஒதுக்கீட்டு எதிரிகளின் வில்லுக்கு அம்பாகாதீர்கள்!

உடனடியாக செயல்பட்ட முதலமைச்சருக்கு நமது நன்றி! நன்றி!! நன்றி!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக