செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பிரசார் பாரதி கலையரங்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்.


 ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பிரசார் பாரதி கலையரங்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்  தொடங்கி வைத்தார்.

நவீன டிஜிட்டல் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கலையரங்கத்தில் 170க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இந்தக் கலையரங்கம் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. தற்போது இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு எல் முருகன், ஸ்ரீநகர் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆற்றிய முக்கியப் பங்கைப் பாராட்டினார். இந்த இரு நிறுவனங்களும் தரமான நிகழ்ச்சிகளைப் பல மொழிகளில் பல தசாப்தங்களாகத் தயாரித்து வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.  2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஸ்ரீநகர் அகில இந்திய வானொலி ஆற்றிய முக்கியப் பங்கை அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என அவர் கூறினார்.  370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின் ஜம்மு காஷ்மீர் விரைவான வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்புப் பாதையில் செல்கிறது என மேலும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி, சிறந்த ஆளுகைக் கருத்து மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் அணுகுமுறை ஆகியவை இந்த யூனியன் பிரதேசத்தை பிரமாண்ட வளர்ச்சிப் பாதையில் வைத்துள்ளது என அமைச்சர் திரு எல் முருகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக