புதன், 6 அக்டோபர், 2021

உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது திட்டமிட்ட வகையில் காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்! பா.ஜ.க. ஆட்சியில் பாசிசத்துக்கு அளவேயில்லை - கி.வீரமணி


உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது திட்டமிட்ட வகையில் காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்! பா.ஜ.க. ஆட்சியில் பாசிசத்துக்கு அளவேயில்லை - வாக்குச் சீட்டு ஆயுதத்தின்மூலம் பாடம் கற்பிப்பீர்! - கி.வீரமணி

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் - அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ஓராண்டுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது.

வரலாறு காணாத விவசாயிகள் அறப்போராட்டம்

வரலாறு கண்டிராத வகையில் பல்லாயிரக்கணக்கானோர் இவ்வளவுக் காலம் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருப்பது வியப்புக்குரியதாகும்.

இதில் என்ன பெருங்கொடுமை என்றால், ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கக்கூடியவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திட மறுத்து வருவதுதான்.

விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை வன்முறைக் களமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு முயற்சியில் பா.ஜ.க. - சங் பரிவார் வட்டாரம் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

உ.பி. சட்டமன்றத் தேர்தலும் - கலவரமும்!

உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில், உ.பி. லக்கிம்பூரில் நடத்தப்பட்டுள்ள சம்பவம் இந்த வகையில் நோக்கத்தக்கதே.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முசாபூரில் திட்டமிட்டு மதக்கலவரம் தூண்டப்பட்டு, அதன் அரசியல் இலாபம் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லையா?

கடந்த 3 ஆம் தேதி நடந்தது என்ன?

கடந்த 3 ஆம் தேதி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரின் மகன்  பயணித்த கார் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்த விவசாயிகளின் பின் பக்கம் விரைந்து மோதியதில், அந்த இடத்திலேயே இரண்டு விவசாயிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதன் எதிர்விளைவாக நடந்த கொந்தளிப்பில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். ஒரு செய்தியாளர் உள்பட ஒன்பது பேர் பலியான கொடுமை அதிர்ச்சிக்குரியது.

இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் காங்கிரசின் உ.பி. மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரும் தடுக்கப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சியினர் தங்களின் கடமையை ஆற்ற உரிமை கிடையாதா?

இன்னொரு ஜாலியன் வாலாபாக்கா?

ஆட்சி அதிகாரப் பலத்தோடு நடந்தேறிய படுகொலைகளைக் கண்டித்து பிற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பஞ்சாப் முதலமைச்சர் சரண்சிங் சன்னி - ‘‘லக்கிம்பூர் கலவரம் ஜாலியன் வாலாபாக் கலவரம் போன்றது!’’ என்று கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை!

நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று உ.பி. மாநில துணை முதலமைச்சரும், ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சரும் பதவி விலகவேண்டும் என்ற குரல் விவசாயிகள் மத்தியில் வெடித்துக் கிளம்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசின் விசாரணை போதாது - சி.பி.அய். விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற உரத்தக் குரலும் கிளம்பியுள்ளது!

பிரதமர் வாய் திறக்காதது ஏன்?

இவ்வளவு நடந்தும் பிரதமர் வாயே திறக்கவில்லை. நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? என்பது முக்கியமான கேள்விக்குறி. மாறாக, நேற்றே ஒர பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேருருரை ஆற்றினார் - என்னே மனிதநேயம்?

விசாரணைகள் ஒருபுறம் நடக்கட்டும். அதன் முடிவுகள் வருவதும் இன்னொருபுறம் இருக்கட்டும்.

அடக்குமுறை ஆயுதமும் - வாக்குச் சீட்டு ஆயுதமும்!

வன்முறையே ஆளும் தரப்பின் ஆயுதம் என்று முடிவான நிலையில், மக்கள் கையில் எடுக்கவேண்டிய பேராயுதம் ஒன்று உண்டு. அதுதான் அவர்களின் கையில் இருக்கும் வாக்குச் சீட்டு -  உத்தரப்பிரதேசத்தில் அடுத்து நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியிலே புதிய எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக பாசிச சக்திகள் முற்றிலும் இந்தியா முழுவதும் வீழ்த்தப்படும் நிலை ஏற்படும் என்பது உறுதி! உறுதி!! 

எதிர்க்கட்சிகளின் கடமை என்ன?

எதிர்க்கட்சிகளும் கருத்து வேற்றுமைகளை விலக்கி வைத்து ஒன்றிணைந்து வெகுமக்கள் சக்தியாகப் பேருரு எடுத்து செயல்படவேண்டியது காலகத்தின் கட்டாயமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக