புதன், 6 அக்டோபர், 2021

அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!

 அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!

 தமிழ்நாட்டிலுள்ள அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்படுவதை கைவிட வேண்டுமெனவும்,  அலுவலக மொழிகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டம் 347 பிரிவின் படி ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியையே தேர்வு செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் தான் அச்சடிக்கப்பட வேண்டுமெனவும் ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.   

இதைத்தொடர்ந்து அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு,  தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தபால் துறையின் தலைமை அலுவலகம் மூலம் ஒரு உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் இனி சிறுசேமிப்பு படிவங்கள் இரு மொழிகளில் அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் வரவேற்கிறோம். மேலும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள மொழி உரிமையை பாதுகாக்கும் வகையிலும், மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாகவும் இப்பிரச்னையில் உடனடியாக தலையீடு மேற்கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களையும் பாராட்டுவதோடு, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அலுவல் மொழி சட்டத்தை நீர்த்துப் போகும் வகையிலான முயற்சிகளையும், தமிழ் மொழியை பாரபட்சமாக அணுகுவதையும் தொடர்ச்சியாக பின்பற்றி வரும் போக்கினை முற்றாக கைவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக