வெள்ளி, 1 அக்டோபர், 2021

IAS, IPS. உள்ளிட்ட தேர்வுகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் கபளீகரம்! உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டின் கோர விளைவுதான் இது!.- கி.வீரமணி


 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் கபளீகரம்!

உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டின் கோர விளைவுதான் இது!

வெகுமக்களின் ஒன்றிணைந்த போராட்டமே சமூகநீதியை மீட்க ஒரே வழி!

2020 ஆம் ஆண்டு ஒன்றிய தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீஸ் (அய்.ஏ.ஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., அய்.எஃப்.எஸ்.) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெற்றி பெற்ற 761 பேரில், 263 பேர் பொதுப் பிரிவில் வென்றவர்கள் ஆவர்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினர் (EWS) 86 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 229 பேர் தேர்வாகியுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பிரிவில் இருந்து 122 பேர், பழங்குடி (எஸ்.டி.,) பிரிவில் இருந்து 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்ச்சி பெற்றவர்களில் 150 பேர் ரிசர்வ் பட்டியலில் உள்ளனர். இதில் 75 மாணவர்கள்பொதுப் பிரிவினர் ஆவர். உயர்ஜாதியினர் 15 பேர்,  இதர பிற்படுத்தப்பட்டோர் 55, தாழ்த்தப்பட்டோர் 4, மற்றும் பழங்குடியினர் ஒருவர் ஆவர்.

கட் ஆஃப் மார்க் - பொது 92.51%, இதர பிற்படுத்தப்பட்டோர் 89.12%, தாழ்த்தப்பட்டோர் 74.84%, பழங்குடியினர் 68.71%, உயர்ஜாதி ஏழை (EWS) 77.55%. இதர பிற்படுத்தப்பட்டோரையும்விட, உயர்ஜாதி ஏழையர்க்கு குறைந்த கட் ஆஃப் எதைக் காட்டுகிறது?

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைக் காட்டிலும், உயர்ஜாதியினர் (EWS) என்ற அரிய வகை ஏழைகளுக்கு ஒன்றிய தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் மிகவும் குறைவு.

இட ஒதுக்கீடு அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் 27 சதவிகித ஒதுக்கீடு முழுவதும் நிரம்பவில்லை. முதல் நிலைப் (Group 1) பணியில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர். இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை எந்த ஒரு தடையுமின்றி பார்ப்பனர்கள் உயர்ஜாதி பொருளாதார நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் 10 சதவிகிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இதர பிற்படுத்தப்பட்டோரின் இடங்களைப் பறித்துக்கொள்கின்றனர். இரயில்வே, வங்கி என்று இருந்தது - இப்போது அரசு குடிமைப் பணியிலும் இந்த மோசடி தொடர்கிறது.

முதல் குரல் கொடுத்தது திராவிடர் கழகம்

உயர் ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவிகிதம் என்று பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பாட்டுக்கு அவசர அவசரமாக - சட்ட விரோதமாக திணித்தபோதே - இது ஆபத்தானது - சமூகநீதியின் ஆணிவேரையே வெட்டி வீழ்த்தும் பார்ப்பன சதி - இட ஒதுக்கீடுக்கு எப்பொழுதுமே எதிர்திசையில் வரிந்து கட்டி நிற்கும் ஆர்.எஸ்.எஸின் அபாயகரமான கொள்கை என்று திராவிடர் கழகம் முதல் குரல் கொடுத்தது. சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் போர்க்கொடி தூக்கினர்.

அவற்றை ஆர்.எஸ்.எசைத் தாய்ப்பீடமாகக் கொண்ட பி.ஜே.பி. ஆட்சி அலட்சியப்படுத்தியது.

வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தபோதும்...

இதன்மீதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருந்தபோதும், அதனைப் பொருட்படுத்தாமல், அவசர கதியில் மூன்றே வாரத்தில் செய்து முடித்துவிட்டது.

அதன் விளைவுதான் - ஒன்றிய தேர்விலும் (யூ.பி.எஸ்.சி.), வங்கித் தேர்விலும் உயர்ஜாதியினர் அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே, பதவிகளை அளவுக்குமேல் ஆக்கிரமித்து அஜீரணத்துக்கு ஆளானவர்கள், மேலும் இடங்களைக் கைப்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்து வருகின்றனர்.

புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆய்வுப்படி பார்ப்பனர்கள் 44 சதவிகிதம் அளவுக்கு அனைத்துப் பதவிகளிலும் ஆதிக்க நங்கூரம் பாய்ச்சி அசையாது நிற்கின்றனர்.

பார்ப்பனர்கள் 44%,

பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் 35%

பிற்படுத்தப்பட்டோர் 19%

பட்டியலின மக்கள் 18%

பழங்குடியினர் 13%

என்ற நிலையில்தான் உள்ளனர்.

பொருளாதார நிலை என்று எடுத்துக்கொண்டாலும், 

பார்ப்பனர்கள் 49.9%

இதர பிற்படுத்தப்பட்டோர் 15.8%

பட்டியலின மக்கள் 9.5%

என்ற நிலையில்.

பொருளாதார அடிப்படையிலும் உயர்ந்தே நிற்கின்றனர்.

(ஆதாரம்: ‘தி எகனாமிக் டைம்ஸ்’, நாள்: 2019 மே 12-19)

ஆக, கல்வி நிலையிலும் சரி, உத்தியோக நிலையிலும் சரி, பொருளாதார நிலையிலும் சரி, உயர்ஜாதியினர், குறிப்பாகப் பார்ப்பனர்கள் உயர்ந்த நிலையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அஜீரணக்காரர்களுக்குப் பந்தியில் முதலிடமா?

இந்த நிலையில், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்வரை பொருளீட்டக் கூடிய உயர்ஜாதியினரை ஏழைகள் என்ற பட்டியலுக்குக் கொண்டு வந்து, அவர்களைப் பந்தியில் முதலிடத்தில் அமர வைத்து தடபுடல் விருந்து அளிப்பது - எந்த அளவு நியாயமானது - ஆதிக்க வெறியின் உச்சக்கட்ட ‘நிர்வாண’ தாண்டவம் அல்லாமல், வேறு என்ன?

காலம் காலமாக கல்வி வாய்ப்பும், உத்தியோக வாய்ப்பும் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலையில், 100-க்கு 3 சதவிகிதமே உள்ள பார்ப்பனர்கள் இருப்பதை எல்லாம் கணக்கில் கொண்டுதான், கவனத்தில் கொண்டுதான் - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் என்ற அளவுகோல் இட ஒதுக்கீட்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது (1951).

பொருளாதார அளவுகோல் - நாடாளுமன்ற முடிவு என்ன?

பொருளாதார அளவுகோல் என்று கொண்டு வரப்பட்ட திருத்தமும் நாடாளுமன்றத்தில் (243-க்கு.. 5 வாக்குகள்) நிராகரிக்கப்பட்டது.

போதும் போதாதற்கு ‘நீட்’ என்னும் கொடுவாளுக்கு கூர்தீட்டி - எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புறத்தினர், முதல் தலைமுறையாகக் கல்விச் சாலையில் நுழைந்தவர்களின் வாழ்வில் கொடூரமாக ஏவப்படுகிறது.

ஒரே வழி வெகுமக்கள் போராட்டமே!

இதற்கு ஒரே தீர்வு பார்ப்பனர் அல்லாத அத்தனைப் பிரிவினரும் ஒன்றிணைந்து இந்திய அளவில் வெகுமக்கள் போராட்டம் என்ற எரிமலை வெடித்தாக வேண்டும். இதைத் தவிர இதற்கு வேறு மார்க்கம் இல்லை - இல்லவே இல்லை!

இந்தியாவுக்கு இப்பொழுது உடனடியான தேவை சமூகநீதிக்கான போராட்டமே!

ஒன்றிடுவோம் - வென்றிடுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக