செவ்வாய், 1 ஜூன், 2021

பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுதமிழர்களையும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப்போற்றும் வகையில், அவரது பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.- தொல்.திருமாவளவன்


நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்! தமிழக முதல்வருக்கு விசிக வேண்டுகோள்!

ஜூன் 03 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள். இன்று அவர் நம்மிடையே இல்லையெனினும், அவரது கொள்கை வாரிசாகவும் தமிழக முதல்வராகவும் இருந்து திமுகவையும் தமிழக அரசையும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.  அரசியல் பகைவரும் அகம் நெகி்ழ்ந்து பாராட்டும் வகையில், அவர் இன்று ஆட்சிநிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மிகவும் சிறப்பாக, திறம்பட செயல்பட்டு வருகிறார்.

கலைஞர் விட்டுச்சென்ற களப்பணிகள் மற்றும்  கருத்தியல் சார்ந்த பணிகள் யாவற்றையும் இன்று போற்றுதலுக்குரிய வகையில்  முன்னெடுத்துச் செல்கிறார். அத்தகைய பாராட்டுக்குரிய மாண்புமிகு முதல்வர் அவர்கள், மறைந்த கலைஞர் அவர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்தநாளான சூன்-03 அன்று, பத்தாண்டுகளுக்கும் மேல் நெடுங்காலமாக சிறைப்பட்டிருப்போர் யாவரையும் மாந்தநேய அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  

கொரோனா கொடுந்தொற்றின் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு சிறைவாசிகளை உடனே விடுதலை செய்யவேண்டுமென  உச்சநீதிமன்றம் ஏற்கனவே உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதனை ஏற்கனவே ஏழுதமிழர் விடுதலை குறித்த வேண்டுகள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

கலைஞர் அவர்கள், சிறை நிர்வாக சீர்திருத்தம், சிறைவாசிகளின் நலன்கள், சிறைத்துறையினரின் உரிமைகள் போன்றவற்றில் முற்போக்கான பார்வையுடன் கூடிய அக்கறையும் சனநாயக அணுகுமுறைகளையும் கொண்டிருந்தவர். அவரது வழியில் ஆட்சிநிர்வாகத்தைச் சிறப்புற நடத்திட வேண்டுமென்கிற பொறுப்புணர்வோடு இன்று இயங்கிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், கலைஞரி்ன் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேல் தங்களின் தண்டனைக் காலத்தைக் கழித்துள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

அத்துடன், வயது மூப்படைந்தோர், கடுமையான நோய்களுக்கு ஆட்பட்டோர், வழக்குகளை நடத்த பொருளாதார வலிமையின்றி பல ஆண்டுகளாக உள்ளேயே கிடக்கும் விசாரணைக் கைதிகள், பெண் கைதிகள் போன்றோரையும்; 

பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுதமிழர்களையும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப்போற்றும் வகையில், அவரது பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக