வியாழன், 3 ஜூன், 2021

சிவப்பு நட்சத்திர கூட்டங்களில் உள்ள லித்தியம் உற்பத்திக்கு பின்னணியில் உள்ள செயல்முறையை, இந்திய வான் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


 நட்சத்திரங்களை ஆராயும் போது உணரப்பட்ட அபரிமிதமான லித்தியம் அளவுக்கும், கோட்பாடு அளவில் கணிக்கப்பட்ட அளவுக்கும் இடையேயான மாறுபாடு, இது பற்றிய ஆர்வத்தை வானியலாளர்களுக்கு நீண்ட காலமாக ஏற்படுத்தியிருந்தது.  

சிவப்பு நட்சத்திர கூட்டங்களில் உள்ள லித்தியம் உற்பத்திக்கு பின்னணியில் உள்ள செயல்முறையை, இந்திய வான் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிவப்பு நட்சத்திரங்களில் லித்தியம் அதிகமாக காணப்படுவது பொதுவானதுதான் என்பதை கண்டுபிடித்து,  நட்சத்திரத்தின் பரிணாமத்தில் லித்தியம் உற்பத்தி அதிகரிக்கும் இடமாக ஹீலியம் ஒளிரும் கட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மாற்றம் ஏற்படும் காலக்கட்டம் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கிறது. அப்போது சிவப்பு நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள ஹீலியம் எரிந்து சிவப்பாக காட்சியளிக்கிறது.

சமீபத்தில் பெங்களூரில் உள்ள இந்திய வான்இயற்பியல் மையத்தின் விஞ்ஞானிகள், சிவப்பு நட்சத்திரங்களில் ஹீலியம் ஒளிரும்  2 மில்லியன் ஆண்டு கால கட்டத்தில், லித்தியம் அளவுக்கு அதிகமாக இருப்பதையும், அதன்பின் அதன் அளவு குறைவதற்கான  ஆதாரங்களையும் கண்டறிந்தனர். 

இவர்களின் ஆய்வுப்படி, நட்சத்திரங்களில் லித்தியம் அதிகரிப்பது, நிலையற்ற நிகழ்வு போல் தோன்றுகிறது.

இந்த ஆராய்ச்சி இந்திய வான் இயற்பியல் மையத்தின் பேராசிரியர்கள் திரு.ரகுபர் சிங் மற்றும் ஈஸ்வர் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்த குழுவில் ஆஸ்திரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி சைமன் கேம்ப்பெல், சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த பாரத் குமார், அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாதோ விரார்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில்  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து திரு ரகுபர் சிங் கூறுகையில், ‘‘எங்களின் நட்சத்திர ஆய்வில் ஹீலியம் ஒளிரும் கட்டத்தை பற்றி அதிகம் ஆராயவில்லை, லித்தியம் உற்பத்தியை மட்டும் புரிந்து கொண்டோம். இந்த புதிய முடிவுகள், மேலும் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக