புதன், 2 ஜூன், 2021

பால் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்துள்ளதாகவும், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கூடுதல் உற்பத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.- திரு அதுல் சதுர்வேதி


 உலக பால் தினத்தை நினைவு கூறும்வகையில், ‘நாட்டின் பால் பொருட்கள் ஏற்றுமதியின் முழு திறனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள்’ குறித்த கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் (அபெடா), மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தியது. 

இதில் முக்கிய உரை நிகழ்த்திய மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர், திரு அதுல் சதுர்வேதி, ‘‘பால் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்துள்ளதாகவும், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கூடுதல் உற்பத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் உள்ள முன்னேற்றம் குறித்து அவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற பாடத்தை கொவிட் கற்றுக் கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆற்றல்  பால் பொருட்களில் உள்ளது எனவும் திரு சதுர்வேதி குறிப்பிட்டார். தரமான பொருட்களுக்கு தேவை இருப்பதாகவும், அதற்கு எந்த விலையும் தர மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். பால் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம், தேசிய கால்நடை திட்டம், கால்நடை ஆரோக்கிய மற்றும் நோய்கட்டுப்பாடு மற்றும் கடல்நடை வளர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதி போன்ற கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையின் திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி மூலம் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய திரு சதுர்வேதி, மத்தியப் பிரிவு திட்டத்தின் கீழ் கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்ததையும் குறிப்பிட்டார். 

கால்நடைகளுக்கான ஊட்டச்சத்துக்கு தரமான கால்நடைத் தீவனம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.  பசுஆதார் மூலம் பசுக்கள் அடையாளம் காணப்படுகிறது. கால்நடை வளர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதித் திட்டத்தையும் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக