மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில் நுண்நிதி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கேஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில் நுண்நிதி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மகளிர் திட்ட அலுவலர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் (08.06.2021) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பெண்களுக்கு குறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதிலும், கடனை திரும்ப வசூலிப்பதிலும் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்த விபரங்கள் அரசின் கவனத்திற்கு வந்ததால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.05.2021 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கும் கடிதம் வாயிலாக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதிலும், சுய உதவிக் குழுக்கள் கடனை திரும்பச் செலுத்துவதிலும் சலுகைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 13.05.2021 அன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், 21.05.2021 அன்று நுண்நிதி நிறுவனங்களுடனும், 25.05.2021 அன்று சிறு கடன் வழங்கும் வங்கிகளுடனும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இந்நிலையில், சுய உதவிக் குழுக்களிடம் நுண்நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பதில் கடுமையான போக்கினை கையாளுகின்றன என்ற விபரம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கேஆர். பெரியகருப்பன் அவர்கள், இன்று (08.06.2021) சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பிரச்சனைகளை காணொலி வாயிலாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
மேலும் மாவட்டந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய மாநில அளவில் ஓர் உதவி அழைப்பு மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மிக விரைவில் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து மகளிர் திட்ட அலுவலர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி, கடனை திரும்பச் செலுத்துவதில் சுய உதவிக் குழுக்களுக்கு உள்ள பிரச்சனைகள், நுண்நிதி நிறுவனங்களின் அணுகுமுறைகள் மற்றும் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வங்கிக் கடன் இணைப்பு, சுய உதவிக் குழுக்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வினைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள், குறு நிதி நிறுவனங்கள் தங்களுடைய கடனை வசூலிக்கும் போது மென்மையான போக்கினை கையாள வேண்டும் எனவும், இப்பேரிடர் காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு எந்தவிதமான இன்னல்களும், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஏற்படக் கூடாது எனவும், இதனைத் திட்ட இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் கண்காணித்து அவ்வப்போது அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், இப்போக்கிற்கு மாறாக செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் குறிப்பிட்டதுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய கொரோனா கடன் திட்டத்தினை அறிவித்துள்ளது என்றும், இதற்காக அவர்களை பாராட்டக் கடமைபட்டுள்ளேன் என்றும் கூறியதுடன், இதைப்போல், மற்ற வங்கிகளும் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், இக்கொரோனா காலத்தில் புதிய கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக