திங்கள், 19 ஜூலை, 2021

இரு அவைகளிலும் அர்த்தமுள்ள விவாதம் நடைபெற வேண்டும், பரிந்துரைகளை கூட்டாக அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எம்.பி.க்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை இங்கே தெரிவித்துள்ளனர். இரு அவைகளிலும் அர்த்தமுள்ள விவாதம் நடைபெற வேண்டும் என்றார். பரிந்துரைகளை கூட்டாக அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ஆரோக்கியமான ஜனநாயகம் என்ற நமது மரபின் அடிப்படையில், மக்கள் தொடர்பான பிரச்சினைகள் சுமூகமான முறையில் எழுப்பப்பட வேண்டும், இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்க, அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த உகந்த சூழலை ஏற்படுத்துவது அனைவரது பொறுப்பு என பிரதமர் கூறினார். மக்கள் பிரதிநிதிகள் கள நிலவரத்தை உண்மையிலேயே அறிய வேண்டும், அப்போதுதான், விவாதத்தில் அவர்களின் பங்களிப்பு, முடிவு எடுக்கும் முறையை சிறப்பாக்கும் என அவர் கூறினார். எம்.பிக்கள் பலர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உதவும் என அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும், இதற்கு அனைத்து கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத் தொடர் சுமூகமாக நடைப்பெற்று தனது பணிகளை நிறைவு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இணையமைச்சர்கள் திரு அர்ஜூன் ராம் மெஹ்வல் மற்றும் திரு வி.முரளீதரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அகாலி தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உட்பட 33 அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக