வியாழன், 15 ஜூலை, 2021

உத்தரப் பிரதேசம் நாட்டின் முன்னணி முதலீடு தலமாக வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் திரு நரேந்திர மோடி


 வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை,  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதி,  கொதௌலியாவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் படகு போக்குவரத்து, வாரணாசி - காசிபூர் நெடுஞ்சாலையில் 3 வழி பாலம் உட்பட பல பொது திட்டங்கள்  மற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.  இந்த திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.744 கோடி.

ரூ.839 கோடி மதிப்பிலான பல திட்டங்கள் மற்றும் பொதுப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பெட்ரோ கெமிக்கல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையத்தின் (CIPET) திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கர்க்கியான் பகுதியில் மாம்பழம் மற்றும் காய்கறிகளின் ஒருங்கிணைந்த பேக்கிங் இல்லம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கியுள்ளன. 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த சில மாதங்களாக, மாறுபட்ட கொரோனா வகை முழு வீச்சில் தாக்கியதை நினைவுக் கூர்ந்தார்.  இந்த சவாலை எதிர்கொள்வதில் உத்தரப் பிரதேசம் மற்றும் காசி மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். தொற்றை எதிர்கொள்வதில் உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் புகழ்ந்தார்.  காசியில் கொரோனாவுக்கு எதிரான பணியில் இரவு, பகலாக செயல்பட்டு ஏற்பாடுகளை செய்த குழுவினர் மற்றும் நிர்வாகத்தினரையும் அவர் பாராட்டினார். ‘‘சிக்கலான நாட்களிலும், காசி ஓயாமல் பணியாற்றியது’’ என பிரதமர் குறிப்பிட்டார்.  கொவிட் இரண்டாம் அலையை கையாண்டதை, இதற்கு முன்  அழிவை ஏற்படுத்திய  மூளை  தொற்று பாதிப்புடன்  அவர் வேறுபடுத்தினார்.  மருத்துவ வசதிகள் மற்றும் அரசியல் விருப்பம் இல்லாத நிலையில் சிறு சவால்கள் கூட, பெரியளவில் உருவெடுக்கும். இன்று உத்தரப் பிரதேசத்தில், அதிக எண்ணிக்கையில் கொவிட் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் நடைப்பெறுகின்றன என பிரதமர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில், விரைவாக மேம்படுத்தப்பட்டு வரும் மருத்துவ கட்டமைப்புகளை திரு நரேந்திர மோடி விவரித்தார்.  மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.  பல மருத்துவ கல்லூரிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் 550 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதாகவும்,  அவற்றில் 14 இன்று தொடங்கப்பட்டதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை அதிகரிக்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.  சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.23,000 கோடி நிதியுதவி, உத்தரப் பிரதேசத்துக்கு உதவும் என அவர் கூறினார்.  பூர்வாஞ்சல் பகுதிக்கு, காசி மிகப் பெரிய மருத்துவ மையமாக மாறிவருகிறது என்றும் பிரதமர் கூறினார்.  முன்பு தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டும் கிடைத்த சிகிச்சைகள் தற்போது காசியில் கிடைக்கின்றன என அவர் கூறினார்.  இன்று தொடங்கப்பட்ட சில திட்டங்கள், வாரணாசியின் மருத்துவ கட்டமைப்பை மேலும் அதிகரிக்கும்.

பழங்கால காசி நகரில்  பல திட்டங்கள் பாதுகாப்புடன் நடந்து வருவதாக பிரதமர் கூறினார்.  நெடுஞ்சாலை, மேம்பாலம், ரயில்வே பாலங்கள், பாதாள வயரிங், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு இதற்கு முன் இல்லாத வகையில் அழுத்தம் கொடுக்கிறது. ‘‘தற்போது கூட ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன’’ என பிரதமர் கூறினார்.

கங்கை மற்றும் காசியின் தூய்மை மற்றும் அழகு ஆகியவை  விருப்பமாகவும், முன்னுரிமையாகவும் இருக்கிறது.  இதற்காக, சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பூங்காக்கள் மற்றும் படித்துறைகள் அழகுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பாஞ்ச்கோஷி மார்க்கை அகலப்படுத்துவது, வாரணாசி காசிபூரில் பாலம் ஆகியவை பல கிராமங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள நகரங்களுக்கு உதவும் என பிரதமர் கூறினார்.

காசி முழுவதும் பொருத்தப்பட்டுள்ள பெரிய எல்இடி திரைகள் மற்றும் படித்துறைகளில்  உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகைகள்  பார்வையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  இந்த எல்இடி திரைகள் மற்றும் தகவல் பலகைகள், காசியின் வரலாறு, கட்டிடக்கலை, கைவினைப் பொருட்கள், கலை போன்ற தகவல்களை பக்தர்களுக்கு கவரும் வகையில் அளிக்கும். 

காசி விஸ்வநாத் கோயிலில் உள்ள  கங்கை நதியின் படித்துறையில் நடக்கும் ஆரத்தி ஒளிபரப்பை, நகரத்தில் உள்ள அனைத்து பெரிய திரைகளிலும் காட்ட முடியும்.  இன்று தொடங்கப்பட்டுள்ள படகு சேவைகள், சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் ருத்ராட்ச மையம், இந்நகரத்தின் கலைஞர்களுக்கு உலகத் தரத்திலான தளத்தை அளிக்கும்.

காசியை, நவீன கால கற்கும் மையமாக மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார்.  இன்று காசியில் மாதிரி பள்ளி, ஐடிஐ மற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. சிபெட் மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம், இப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நாட்டின் முன்னணி முதலீட்டு தலமாக உத்தரப் பிரதேசம் வேகமாக வளர்ந்து வருகிறது என பிரதமர் கூறினார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வர்த்தகம் செய்வதற்கு சிரமமான இடமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகச் சிறந்த இடமாக மாறி வருகிறது.  சமீபகாலமாக உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில்,  யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.  பாதுகாப்பு வளாகம், பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, பண்டல்கண்ட் நெடுஞ்சாலை, கோரக்பூர் நெடுஞ்சாலை, கங்கா விரைவுச் சாலை போன்ற திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டியலிட்டார்.

நாட்டின் வேளாண் கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இது நமது வேளாண் சந்தைகளுக்கும் பயனளிக்கும்.  நாட்டின் வேளாண் சந்தைகளை நவீனமாக மாற்றுவதில்  இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர்,  இதற்கு முன்பும், திட்டங்கள் மற்றும் நிதிகள் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், அவற்றுக்கு லக்னோவில் தடை விதிக்கப்பட்டதாகவும்  கூறினார்.  வளர்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, உத்தரப் பிரதேச முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். 

உத்தரப் பிரதேசத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக பிரதமர் கூறினார். ஒரு காலத்தில் மாபியா மற்றும் தீவிரவாதம் கட்டுப்பாடின்றி இருந்ததாகவும், தற்போது அவை சட்டத்தின் பிடியில் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

சகோதாரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சத்துடன் இருந்த நிலை  எல்லாம் தற்போது மாறிவிட்டதாக பிரதமர் கூறினார்.   இன்று உத்தரப் பிரதேச அரசு, வளர்ச்சியில் இயங்குகிறது என்றும், ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை போன்றவற்றால் இயங்கவில்லை எனவும் பிரதமர் கூறினார்.  அதனால்தான், உத்தரப் பிரதேசத்தில், திட்டங்களின் பயனை மக்கள் நேரடியாக பெறுகின்றனர். அதனால்தான் இன்று, புதிய தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்கின்றன, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என பிரதமர் கூறினார்.

கொரோனா மீண்டும் வலுப்பெற உத்தரப் பிரதேச மக்கள் அனுமதிக்க கூடாது என பிரதமர்  நினைவூட்டினார்.  கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும், கவனம் இன்றி இருந்தால், மிகப் பெரிய அலையை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். கொவிட் நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக