புதன், 13 அக்டோபர், 2021

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசற்ற மற்றும் உள் நாட்டு மாற்று எரி பொருளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.- திரு நிதின் கட்கரி


 மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாற்று எரி பொருள் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசற்ற மற்றும் உள் நாட்டு மாற்று எரி பொருளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

தில்லியில் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் சார்பில், “மாற்று எரிபொருள்- சாலை முன்னேற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், பயோ எத்தனால் மாற்று எரிபொருள் மிக பெரிய நன்மையை விளைவிக்கும் சுத்தமான எரி பொருள்  என்றும் மிகவும் குறைந்த வாயு வெளியேற்றத்துடன் கூடிய பசுமை இல்ல எரிபொருள் என்றும் கூறினார்.

இதனை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் நேரடியாக கிடைக்கும் என்றும் இதன் மூலம் கிராம புற மற்றும் பின் தங்கிய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார். பயோ எத்தனாலின் உற்பத்தி திறன் மற்றும் அதனை எரி பொருளாக ஏற்றுக்கொள்ளும் அளவை பொறுத்து மத்திய அரசு E-20 என்ற எரிபொருள் திட்டத்தை மறு வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். 2025-ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகித பெட்ரோலுடன் பயோ எத்தனால் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும் என்று‌ம் இதற்கு 10 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் தற்போது சர்க்கரை  ஆலைகள் 90 சதவிகித எத்தனால் கலப்பு எரி பொருள் தேவையை பூர்த்தி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளினால் எத்தனால் அதிகமாக கிடைக்கும் மாநிலங்களில் இருந்து எத்தனால் குறைவாக கிடைக்கும் வட கிழக்கு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்.

விமான போக்குவரத்திலும் பயோ எத்தனாலை நிலையான எரி பொருளாக பயன் படுத்த முடியும் என்று கூறிய அவர், 80 சதவிகிதம்‌ வரை வாயு வெளியேற்றம் தவிர்க்கப்பட்டு வழக்கமான விமான எரி பொருளுடன் 50 சதவிகிதம் வரை கலக்க முடியும் என்றும்  கூறினார். இது ஏற்கனவே இந்திய விமான படை மூலம் பரிசோதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

100 சதவிகிதம் அளவிற்கு பயோ எத்தனாலை எரி பொருளாக பயன்படுத்தும் பிளக்ஸ் எரி பொருள் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் பயோ எத்தனாலின் தேவை 4 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக