புதன், 6 அக்டோபர், 2021

ஒரு ஜோடி குத்துச்சண்டை கையுறைகளை பாக்சிங் வீராங்கனை திருமதி எம் சி மேரி கோம் குடியரசு துணைத் தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்

 நாட்டில் விளையாட்டுகளை ஊக்குவிக்க தொழில்துறை முன்வர வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த முறை இன்னும் சிறப்பாக நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நமது மாபெரும் நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் உந்துசக்தியையும் புத்துணர்ச்சியையும் உணர்கிறேன் என்று அவர் கூறினார். எட்டு வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவின் கிரீடத்தில் பிரகாசிக்கும் நகைகள் என்று வர்ணித்த அவர், மலைகளின் இயற்கை அழகையும் அமைதியையும் இங்குள்ள மக்களின் அரவணைப்பையும் மறக்கமுடியாத அனுபவம் என்று விவரித்தார். 

வடகிழக்கு மாநிலங்களுக்கு எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவர், மணிப்பூரை சேர்ந்த சாதனையாளர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் வீரர்கள், இலக்கிய & கலாச்சார பிரமுகர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் சாதனைகளுக்காக திரு நாயுடு அவர்களைப் பாராட்டினார் மேலும், அவரவர் துறைகளில் சிறந்து விளங்குவதை அவர்கள் எப்போதும் இலக்காக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

உரையாடலின் போது, ஒரு ஜோடி குத்துச்சண்டை கையுறைகளை பாக்சிங் வீராங்கனை திருமதி எம் சி மேரி கோம் குடியரசு துணைத் தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றை அணிந்து கொண்ட திரு நாயுடு, “இவை என்னை பாதுகாக்கும்” என்று நகைச்சுவையாக கூறினார்.

இந்தியாவில் விளையாட்டுகளின் மையம் என்று மணிப்பூரை வர்ணித்த அவர், விளையாட்டில் தேசத்திற்கு பெருமை சேர்ப்பதில் இந்த சிறிய மாநிலம் முன்னிலை வகிக்கிறது என்றார். "மணிப்பூரின் ஒலிம்பிக் வீரர்கள் மாநிலத்தையும் தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர்," என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் கொடியை உயரே பறக்க வைத்ததற்காக அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய திரு நாயுடு, "நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாகவும் ஊக்கத்தின் ஊற்றாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்" என்றார்.

சமீபத்திய டோக்கியோ ஒலிம்பிக்கின் போது வெளிப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்களின் செயல்திறன் குறித்து குடியரசு துணைத் தலைவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த முறை நாம் இன்னும் சிறப்பாக இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

விளையாட்டுகளை ஊக்குவிக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்துறையினர் முன் வந்து விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கிராமப்புறம் வரை விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளை உருவாக்குமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக