புதன், 3 ஜூன், 2020

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று ஒப்புதல் வழங்கியது.


வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும், வேளாண்மைத் துறையில் நிலைமாற்றம் ஏற்படுத்தும், தடம் பதிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம்

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. வேளாண்மைத் துறையில் நிலைமாற்றத்தை உருவாக்கி, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்வதற்கான லட்சிய நோக்கத்துடனான நடவடிக்கையாக இது இருக்கும்.

பின்னணி :

பெரும்பாலான வேளாண் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா உபரி நிலையில் இருந்தாலும், குளிர்பதன வசதி, பதப்படுத்தல் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்குவதால் தொழில் நிறுவனங்களிடம் உத்வேகம் இல்லாத நிலையில் ஏற்றுமதி வசதி ஆகியவற்றில் முதலீடுகள் இல்லாததால், விவசாயிகள் நல்ல விலை பெற முடியாத நிலையில் உள்ளனர். அழுகும் தன்மை கொண்ட பொருள்கள் உற்பத்தியில், அபார விளைச்சல் கிடைக்கும் சமயங்களில் விவசாயிகள் பெருத்த நட்டம் அடைகின்றனர். போதிய பதப்படுத்தல் வசதிகள் இருந்தால், இதில் பெரும் பகுதி நட்டத்தைக் குறைக்க முடியும்.

பயன்கள்:

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துகள், உணவு எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அளவுக்கு மீறிய ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுத் தலையீடுகள் குறித்து தனியார் முதலீட்டாளர்களின் அச்சத்தை நீக்குவதாக இது இருக்கும்.

உற்பத்தி செய்தல், இருப்பு வைத்தல், கொண்டு செல்தல், விநியோகித்தல் மற்றும் வழங்குதலில் சுதந்திரம் கிடைப்பதால், பொருளாதார அளவீடுகளை செம்மைப்படுத்தும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் வேளாண்மைத் துறையில் தனியார் துறையினர் / வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கப்படும். குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கலில் முதலீடு மற்றும் உணவு வழங்கல் சங்கிலித் தொடர் அமைப்பை நவீனப்படுத்தலில் முதலீடு கிடைக்க உதவிகரமாக இருக்கும்.

நுகர்வோரின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்

ஒழுங்குமுறை சூழலை கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்துள்ள நிலையில், நுகர்வோரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்துள்ளது. போர், பஞ்சம், அசாதாரணமான விலை உயர்வு மற்றும் இயற்கைப் பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், இதுபோன்ற பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மதிப்புச் சங்கிலித் தொடர் வசதி ஏற்படுத்தும் திறன் அளவு மற்றும் ஏற்றுமதியாளரின் ஏற்றுமதிக்கான தேவை ஆகியவற்றுக்கு இதுபோன்ற கையிருப்பு வரம்பு அமலாக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எனவே, வேளாண்மைத் துறையில் முதலீடு செய்வதில் அவர்களுடைய ஆர்வம் குறையாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தம், விலை ஸ்திரத்தன்மையை உருவாக்குவதுடன், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க உதவியாகவும் இருக்கும். சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாததால் வேளாண் பொருள்கள் வீணாவதைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக