புதன், 3 ஜூன், 2020

"ஒரே இந்தியா, ஒரே வேளாண் சந்தை: வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தடங்கல் இல்லாத வர்த்தகம்" பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) அவசரச் சட்டம், 2020' -க்கு பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பின்னணி

விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளால் சிரமப்படுகின்றனர். அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு வளாகங்களுக்கு வெளியே, தங்கள் விளைபொருள்களை விவசாயிகள் விற்பதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. மாநில அரசுகள் போன்ற பதிவு பெற்ற உரிமதாரர்களுக்கு மட்டுமே தங்கள் விளை பொருள்களை விற்க வேண்டும் என்று விவசாயிகளுக்குக் கட்டுப்பாடு உள்ளது. மேலும், மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு சட்டங்கள் அமலில் இருப்பதால், பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் வேளாண் விளைபொருள்களை தாராளமாகக் கொண்டு செல்வதில் தடங்கல்கள் இருக்கின்றன.

பயன்கள்

வேளாண் விளைபொருள்கள் விற்பனை மற்றும் கொள்முதலில் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் சூழ்நிலையை அளிப்பதாக இந்த அவசரச் சட்டம் இருக்கும். மாநில வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைப்படுத்துதல் சட்டங்களின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தை வளாகங்களுக்கு வெளியே, மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலத்துக்குள் வர்த்தகம் மற்றும் வியாபாரம் செய்வதை ஊக்குவிப்பதாக இது இருக்கும். நாட்டில் பெருமளவு கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாண்மைச் சந்தைகளைத் திறந்துவிட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக உள்ளது.

இது விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாக, சந்தைப்படுத்தும் செலவுகளைக் குறைப்பதாக இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல விலைகள் கிடைக்க உதவியாக இருக்கும். அபரிமிதமான விளைச்சல் கிடைத்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பற்றாக்குறை உள்ள பகுதிகளில் விற்கும் வாய்ப்பின் மூலம் நல்ல விலைகள் கிடைக்க உதவியாக இருக்கும். எலெக்ட்ரானிக் முறையில் தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதற்கு, கணினி மூலமான விற்பனைத் தளத்தின் மூலம் விற்பதற்கும் இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.

ஒரே இந்தியா, ஒரே வேளாண் சந்தை

இந்த அவசரச் சட்டம், வேளாண் விளைபொருள் விற்பனைக்குழுக்களுக்கு வெளியே வர்த்தகம் செய்ய கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கி, கூடுதல் போட்டி நிலை காரணமாக அதிக விலை பெற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரே இந்தியா, ஒரே வேளாண் சந்தையை உருவாக்க நிச்சயமாக இது வழிவகுத்து, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு பொன்னான அறுவடைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அடித்தளம் இடுவதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக