வெள்ளி, 18 ஜூன், 2021

உலகின் ஒவ்வொரு நாடு, நிறுவனம், சமுதாயம், குடும்பம், தனிநபர்களின் வலிமையை பெருந்தொற்று சோதித்துள்ளது.- பிரதமர் நரேந்திர மோடி

 பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவிட்-19 முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்தப் பயிற்சி திட்டம் 26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் நடத்தப்படும். இந்த முன்முயற்சி மூலம் சுமார் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் பல மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த திட்டம் முக்கியமான அடுத்த கட்ட நடவடிக்கையாகும் என்றார். தற்போதைய தொற்று, உருமாறி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக பிரதமர் எச்சரித்தார். பெருந்தொற்றின் இரண்டாவது அலை, நமக்கு பல வகையான சவால்களைக் காட்டியுள்ளது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பது அவசியமாகும் என்று கூறிய பிரதமர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது இந்த திசையில் எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும் என்றார்.

இந்தப் பெருந்தொற்று உலகில் உள்ள ஒவ்வொரு நாடு, நிறுவனம், சமுதாயம், குடும்பம், தனிநபர் என அனைவரது வலிமையையும் சோதித்துள்ளதாக பிரதமர் நினைவுகூர்ந்தார். அதே சமயம், இந்தத் தொற்று, அறிவியல், அரசு, சமுதாயம், நிறுவனம் அல்லது தனிநபர்களின் திறமையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தியா இந்தச் சவாலை வலிமையுடன் எதிர்கொண்டது. பிபிஇ உபகரணங்கள், பரிசோதனை, கோவிட் தொடர்பான இதர மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவற்றின்  தற்போதைய நிலை, நமது முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தொலை தூர மருத்துவமனைகளிலும், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக திரு மோடி தெரிவித்தார். 1500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து முயற்சிகளுக்கு இடையில், திறன் வாய்ந்த மனித சக்தி அவசியமாகும். இதற்காக, தற்போதைய கொரோனா முன்களப் பணியாளர்களான ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி இரண்டு -மூன்று மாதங்களில் முடிவடைய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஆறு வகையான பயிற்சி வகுப்புகளை நாட்டின் உயர் வல்லுநர்கள் வடிவமைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இல்ல கவனிப்பு, அடிப்படை கவனிப்பு, நவீன கவனிப்பு, அவசரகால கவனிப்பு, மாதிரி சேகரிப்பு , மருத்துவ உபகரண ஆதரவு என்ற ஆறு விதமான பணிகளில் முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில், புதியவர்களும், ஏற்கனவே இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் சேர்க்கப்படுவார்கள். இந்த இயக்கம் சுகாதாரத் துறையின் முன்களப் படையினருக்கு புதிய ஆற்றலை வழங்குவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.

திறமை, மறு திறன், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கொரோனா காலம் நமக்கு உணர்த்தியுள்ளதாக பிரதமர் கூறினார். நாட்டில் முதன் முறையாக திறன் இந்தியா இயக்கம் தனியாக தொடங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், திறன் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டதையும், நாடு முழுவதும் பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டினார். இன்றைய காலத் தேவை அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் இந்தியா இயக்கம் உதவி வருகிறது. கடந்த ஆண்டு முதல், திறன் மேம்பாட்டு அமைச்சகம், தொற்றுக்கு இடையிலும், நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுகாதாரத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிப்பது அவசியமாகும் என பிரதமர் கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக, புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதிய மருத்துவக்கல்லூரிகள், புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதில் கவனம் செலுத்தும் அணுகுமுறைக்கான வேலை நடந்து வருகிறது. இதேபோல, மருத்துவக் கல்வி மற்றும் அது தொடர்பான நிறுவனங்களின் சீர்திருத்தங்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் பணிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

கிராமங்களில் உள்ள சிகிச்சை மையங்களில்  பணியமர்த்தப்பட்டுள்ள ஆஷா பணியாளர்கள், ஏஎன்எம், அங்கன்வாடி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்ற சுகாதாரத் தொழில்முறை  பணியாளர்கள், நமது சுகாதாரத் துறையின் வலுவான தூண்களில் ஒரு பிரிவு என்று பிரதமர் தெரிவித்தார். இவர்களை பற்றிய கவனம் எப்போதும் விடுபட்டு வந்துள்ளது. தொற்றைத் தடுப்பதிலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திலும் இவர்களது பங்கு மிக முக்கியமானதாகும். நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்புக்காக அனைத்து துன்பங்களையும் பொருட்படுத்தாமல் இந்த சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக பிரதமர் புகழாரம் சூட்டினார். கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் தொற்று பரவலைத் தடுப்பதில் இவர்கள் பெரும்பணி ஆற்றி வருவதாக அவர் கூறினார்.

ஜூன் 21-ம் தேதி தொடங்கும் இயக்கம் தொடர்பான பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் அளிக்கப்படும் அதே நடைமுறை, ஜூன் 21 முதல் 45 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் அளிக்கப்படும். நாட்டு மக்கள் அனைவருக்கும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

பயிற்சி பெறுபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில், புதிய திறன்கள் பயன்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக