சனி, 19 ஜூன், 2021

கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்


 நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும், தடுப்பு மருந்து குறித்து சிலர் பரப்பி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை முறியடிக்கவும்,  தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

'ஜான் ஹை தோ ஜஹான் ஹை' எனும் இந்த பிரச்சாரம் 2021 ஜூன் 21 அன்று, பல்வேறு சமூக-கல்வி இயக்கங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோருடன் இணைந்து தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு மதத் தலைவர்கள், சமூக, கல்வி, கலாச்சாரம், மருத்துவம், அறிவியல் மற்றும் இதர துறைகளில் உள்ள பிரபல நபர்கள் உள்ளிட்டோர் தடுப்புமருந்து பெற வேண்டியதற்கான அவசியம் குறித்த தகவல்களை மக்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தெருக்கூத்து நாடு முழுவதும் நடத்தப்படும்.

கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து வதந்திகள் மற்றும் அச்சங்களை சில பேர் உண்டாக்கி வருவதாகவும், இத்தகையோர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு எதிரிகள் என்றும் திரு நக்வி கூறினார்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பின் காரணமாக உள்நாட்டிலேயே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்த தடுப்பு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் பலம்வாய்ந்த ஆயுதங்கள் என்று  அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக