வியாழன், 3 ஜூன், 2021

மத்திய அரசு அருண் மிஸ்ரா அவர்களை திரும்ப பெற்று, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக மனிதநேயமிக்க ஒருவரை நியமிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

மத்திய அரசு அருண் மிஸ்ரா அவர்களை திரும்ப பெற்று, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக மனிதநேயமிக்க ஒருவரை நியமிக்க வேண்டும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் மத்திய அரசால் இரண்டு தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எள்ளளவும் ஏற்கத் தகுந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளுடைய நிர்வாகத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடியவர்கள்; சமூகத்தில் பல்வேறுவிதமான மனித உரிமை மீறலுக்கு ஆளாகக்கூடியவர்கள்; தங்களுக்கு நிர்வாக  அமைப்புக்கள் மூலம் எவ்வித நீதியும் கிடைக்காதவர்கள் அல்லது கிடைக்காது என திடமாக எண்ணக் கூடியவர்களின் கடைசி புகலிடமே தேசிய மனித உரிமை ஆணையம் தான். அந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்கக் கூடியவர்கள் மிக மிக உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாகவும், மனிதநேய மிக்கவர்களாகவும் இருந்திட வேண்டும். இது ஒன்றும் அலங்காரப் பதவியும் அல்ல; அதிகாரம் செலுத்தக்கூடிய இடமும் அல்ல.

’நீயே எனக்கு துணை’ என்று நிர்கதியாக வரக்கூடிய மக்களுக்கு ’நான் இருக்க பயமேன்’ என்று நேசக்கரம் நீட்ட வேண்டிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கக் கூடியவர்கள் கரடுமுரடானவர்களாகவோ, அதிகாரம் எண்ணம் கொண்டவர்களாகவோ இருப்பின் உதவி கேட்டு  அந்த உயரிய அமைப்பின் கதவை யாரும் தட்ட மாட்டார்கள். எனவே, இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் நடந்து வரக்கூடிய மனித உரிமை மீறல்களை உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அமர்த்தப்பட்டால் மட்டுமே, அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறும்.

1996 முதல் 2001 வரையிலும் எண்ணற்ற போராட்டங்கள் நம் மீது திணிக்கப்பட்டது. காவல்துறையினரின் துணையோடு மாநில அரசே ஏழை, எளிய மக்களுக்கு எதிராக எண்ணற்ற அத்துமீறல்களை நடத்திய காலகட்டம்அது. சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழக பிரச்சினை ஏற்பட்டபோது ராஜபாளையம்-தேசிகாபுரத்தில் கைது செய்யப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பெண்கள் இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரையைத் தாண்டி நிலக்கோட்டை சிறையில் அடைப்பதற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களை அழைத்து வந்த காவல்துறை வாகனத்தில் கைது செய்யப்பட்டதேசிகாபுரம் பெண்கள்களின் தலை முடிகளை ஒன்றோடு ஒன்றாக பிணைத்துக் கட்டி ஏறக்குறைய அரை நாட்களுக்கு மேலாகக் காவல் துறையினரால் அலைக்கழிக்கப்பட்ட மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடந்தது.

அதேபோல மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களிலும் தொழிலாளர்களுக்கு அளவற்ற மனித உரிமை மீறல்கள் நடந்தன. 40 நாட்கள் குழந்தைகள் பெற்ற பெண்கள் தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத கொடூரம்; அதன் காரணமாக மார்புகள் வீங்கி, சீழ் பிடித்து, அது இரத்தத்தில் பரவி மாண்டு போன பெண்கள் எத்தனையோ பேர். இது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை புகார் செய்தும் வழக்காக பதிவு செய்யாததாலும்,  அன்றைய அரசே அதற்காகத் துணை நின்றதாலும் அப்போது நமக்கு இருந்த ஒரே ஒரு வாய்ப்பு தில்லியில் அமைந்திருந்த மனித உரிமை ஆணையம் மட்டுமே. அப்பொழுது மனித உரிமை ஆணையத்திற்குத் தலைவராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடாஜல்லையா அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்; மகத்தான மனிதர்; அன்புள்ளம் கொண்டவர்.

அதனால், அவரை பலமுறை டெல்லியில் சந்தித்து தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை எளிதாக எடுத்துரைக்க முடித்தது. மாஞ்சோலையிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து அவரே மணிக்கணக்கில் காது கொடுத்துக் கேட்டார். அங்கு நடந்தேறிய மனித உரிமை மீறல்களைக் கண்டறிய சிபிஐயின் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்று, மனித உரிமை ஆணையத்திலும் அப்போது பணியாற்றி வந்த கார்த்திகேயன் ஐபிஎஸ்  அவர்கள்,  மாஞ்சோலையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களின் உண்மை நிலைகளைக் கண்டறிய நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது 1999 ஜனவரி மாதம் 06 ஆம் தேதி தமிழகமெங்கும் பந்த் அறிவித்திருந்தோம், மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகு, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தினச்சம்பளம் ரூ 15 உயர்த்தப்பட்டது.

அந்த மகத்தான மனிதரான தேசிய மனித உரிமை ஆணையர் வெங்கடஜல்லையா அவர்கள் சென்னை வந்த போதெல்லாம் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறோம். மனித உரிமை ஆணையத்திடம் புகார்களை எடுத்துச் சொல்வோம் என்று அரசுக்கு தெரிந்த பிறகே பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது. அதற்குப் பிறகு மனித உரிமை ஆணையத்திற்கு தலைவராக அவரை போன்று வேறு எவரும் அமர்த்த பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவிலேயே தினம்தினம் அதிகமான மனித உரிமை மீறல்கள் நடக்கும் மாநிலம் தமிழகம் ஆகும்.

எனவே, மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளவர்கள் அன்பும், அரவணைப்பும் கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நிர்க்கதியான மக்கள் மனித உரிமை ஆணையத்தின் கதவுகளை தட்ட முடியும். தற்போது பதவியில் அமர்த்தப்பட்டவர் பதவிக் காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் பரிவு காட்டியதற்கான எவ்வித தடயங்களும் இல்லை. மத்திய அரசு அவருக்கு ஏதாவது பதவி கொடுக்க வேண்டும் என்றால், வேறு துறையில் அமர்த்தலாம். 

எனவே, மத்திய அரசு அருண் மிஸ்ரா அவர்களை திரும்ப பெற்று, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக மனிதநேயமிக்க ஒருவரை நியமிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக