வெள்ளி, 2 ஜூலை, 2021

புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


 தடுப்பூசி, மருந்துகள் மேம்பாட்டை விரைவுபடுத்த,  புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும் என  குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

ஐதராபாத் வந்த குடியரசு துணைத் தலைவர் , அழியும் நிலையில் உள்ள இனங்களின் பாதுகாப்பு ஆய்வு கூடத்தை (LaCONES) பார்வையிட்டார். இந்த ஆய்வு கூடத்தின், பொறுப்பு விஞ்ஞானி டாக்டர் கார்த்திகேயன் வாசுதேவன் அளித்த விளக்கத்தை குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார். மேலும், தேசிய வனவிலங்கு மரபணு வள வங்கி, இனப்பெருக்கக் கூடம், விலங்குகளின் கூண்டுகள் ஆகியவற்றையும் குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார்.

அதன்பின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடம் திரு வெங்கையா நாயுடு பேசியதாவது:

புதிய கொரோனா வகைகளை அடையாளம் காண்பதில், அதன் மரபணு வரிசைமுறை முக்கிய பங்காற்றுகிறது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க இது உதவும். சில உயிரியல் பூங்காக்களில் சிங்கம், புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், புதிய வகை கொரோனாக்களின் மரபணு வரிசைமுறைகளை கண்டறிய வேண்டும். மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் தொற்று பரவுவது கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புக்கு லகோன்ஸ் பல உயிரிதொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது. அழியும் நிலையில் உள்ள மான் வகைகள், மலை புறா ஆகியவை  வெற்றிகரமாக இனப் பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதே போன்ற முயற்சிகளை காஷ்மீரில் உள்ள ஹங்குல் மான், சத்தீஸ்கரின் காட்டெருமைகள், டார்ஜிலிங்கின் சிவப்பு பாண்டா ஆகியவற்றின் இனப் பெருக்கத்துக்கும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

இந்த பயணத்தின் போது, ‘வனவிலங்கு பாதுகாப்புக்கான மரபணு வள வங்கி குறித்த ஒரு அறிமுகம்’ (‘An Introduction to Genetic Resource Banks for Wildlife Conservation’) என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக