செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

இருபத்து ஐந்து மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மானிய உதவியாக ரூ.13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கியது.


 இருபத்து ஐந்து மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மானிய உதவியாக ரூ.13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று வழங்கியது. 2021-22ஆம் ஆண்டில் இதுவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.25,129.98 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மானிய உதவி,  2021-22ஆம் ஆண்டின் தொகுப்பு மானியத்தின் முதல் தவணையாகும். 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் படி இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையைப்  பராமரித்தல், துப்புரவு,   குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்தத் தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.

பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த மானிய உதவியில் 60 சதவீதம்,  தொகுப்பு மானியமாகும். மீதமுள்ள 40 சதவீத மானியத்தை, சம்பளம் தவிர, உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். 

மத்திய திட்டங்களின் கீழ் துப்புரவு மற்றும் குடிநீர் வசதிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியை விட, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  கூடுதல் நிதி கிடைப்பதை இந்தத் தொகுப்பு மானியம் உறுதி செய்கிறது. 

இந்த மானியத்தை 10 நாட்களுக்குள், மாநிலங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். 10 நாட்களுக்கு மேல் தாமதமானால்,  மாநில அரசுகள் மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு நேற்று ரூ.799.8 கோடியும், இந்த நிதியாண்டில் இதுவரை மொத்தம் ரூ.2783.23 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில வாரியாக வழங்கப்பட்ட மானிய உதவி, இதுவரை வழங்கிய மொத்த மானியத்தொகை பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக