செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 31 கொடியன்குளம் அழித்தொழிப்பு! ஒரு சமுதாயத்தின் விடியலுக்கான, அடையாளத்தை-அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான பாடம்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ஆகஸ்ட் 31 கொடியன்குளம் அழித்தொழிப்பு!

படத்திற்கான கருவா? பாடத்திற்கான கருப்பொருளா?

 - டாக்டர் K. கிருஷ்ணசாமி

கொடியன்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தனியார் செக்யூரிட்டிகளால் இணைந்து சூறையாடி 26 வருடங்கள் முடிந்து 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். சுதந்திர இந்தியாவில் இந்தியக் குடிமக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட மனிதக்குலத்தின் மீதான முதல் தாக்குதல் ஆகும்.

இறையாண்மையை காக்கவும், அதில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்ற, குடியரசு ஆட்சியைத் தருவதற்காகவும் பிரகடனம் செய்யப்பட்டதே இந்திய அரசியல் சாசனமாகும். இந்திய நாடு, அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றாலும், அதில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சட்டரீதியாக உரிமைகள் ’சமம்’ என பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தாலும் உரிமைகள் அனைத்து மக்களுக்கும் சமமாக வந்து சேர்ந்ததா? என்றால் இல்லை.

இந்தியத் தேசம் சுதந்திரத்திற்கு பின்பும் பல மதங்கள், பல மொழி சார்ந்த இனங்கள் மற்றும் பல்வேறு சாதிய கூறுகள் எனப் பலவகைகளிலும் பிளவுபடுத்தப்பட்டு இருந்தது. அடக்குமுறைகளும், ஆதிக்கங்களும், சுரண்டல்களும் கண்டத்திற்குக் கண்டம், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். பிற கண்டங்களிலும், நாடுகளிலும் நிற ரீதியான வேறுபாடுகளும், ஒடுக்குமுறைகளும்; சில பிரதேசங்களில் மொழி மற்றும் இன ரீதியான வேறுபாடுகளும் நிலவுகின்றன. தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களும்; இஸ்ரேலில் யூத இனமும்; அமெரிக்காவில் செவ்விந்தியர்களும்; நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பூர்வீக குடிமக்களும்  குடியேறியவர்களால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டனர்.

இந்திய மண்ணை முதலில் ஆக்கிரமித்த துருக்கியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், முகமதியர்கள்; கி.பி 1500க்கு பிறகு குடியேறிய போர்ச்சுக்கல் மற்றும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நடைபெற்ற அழித்தொழிப்புக்கள் ஏராளம். அவைகளெல்லாம் சுதந்திரத்திற்கு முன்பு நடைபெற்றிருந்தாலும் சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியத் தேசத்தில் உள்ள பல குழுக்கள் இடையே நிலவிய மோதல்கள் இன அழிப்பாகவே இருந்தது.

இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 1920-களில் இராமநாதபுரத்தில் துவங்கி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவி, 1995 ஆகஸ்ட் 31 அன்று ஒரு கொதிநிலையை அடைந்தது. உலகின் பிற பகுதிகளில் நிலவிய இன வேறுபாடுகள் எளிதாகக் கண்ணுக்குப் புலப்பட கூடியவைகளாக இருந்தன. ஆனால், தமிழகத்தில் நடைபெற்ற ’இன அழிப்புகள்’ கண்ணுக்குப் புலப்படாதவையாக இருப்பினும், மிகக் கொடூரமாகவே இருந்தன.

ஒரு பகுதியில் வாழக்கூடிய இரண்டு குழுக்களில் ஒரு குழு தன்னை உயர்வானதாகக் கருதிக்கொண்டு இன்னொரு குழுவை முற்றாக அழிப்பது தான் ’இன அழிப்பு அல்லது இன வேறுபாடு’ ஆகும். 1995 ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற்ற கொடியன்குளம் அழிப்பு திடீரென்று ஒரு விபத்து போல நடந்த சம்பவம் அல்ல. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொண்ட பகைமையின் வெளிப்பாடு. அதை வெறும் காவல்துறையின் அத்துமீறலாகவோ,  ஒரு சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையாகவோ மட்டும் பார்க்க இயலாது. ஆட்சியாளர்களின் பின்பலம் இல்லாமல் எந்த ஒரு அரசு எந்திரமும் அவ்வளவு வன்மத்தோடு செயல்படாது. 

1991-95 வரையிலும் தமிழகத்தின் அனைத்து ஆட்சி-அதிகாரங்களும் ’எல்லோரையும் அடக்கி ஆளவேண்டும்’ என்ற ஒரு ’பேரினவாத குழுவிடம்’ முழுமையாக இருந்தது;  எதிர்த் தரப்பிலிருந்தவர்களும் அமைதி காத்தார்கள். உலகில் எந்த குழுக்கள் ஆயுதபாணியாகிறதோ அல்லது அரசு-அதிகாரத்தைக் கைப்பற்றுகிறதோ அவை மற்ற குழுக்களை அடக்கியாள மட்டும் நினைப்பது இல்லை அவர்களின் அடையாளங்களையும் முற்றாக அழிப்பதும்; அவர்களை நிரந்தரமாக அடிமையாக்குவதும், சிறு எதிர்ப்பு காட்டினாலும் முற்றாக அழிப்பதுமே நியதியாக இருந்துள்ளது.

சரியாக ஒப்பிட்டுப் பேசுவது என்றால் ஆப்கானிய தாலிபன்கள் இடத்தில் ஆட்சி-அதிகாரம், ஆயுத பலம் சென்றவுடன் அவர்கள் தாங்கள் பரம எதிரிகளாகக் கருதக்கூடிய ’ஹசாரா’ என்ற ’சியா’ பிரிவு மீது தான் தாக்குதல் தொடுக்கிறார்கள். இதற்கும் ஹசாரா பிரிவினர் ஆப்கானின் பூர்வீகக் குடிமக்களே; இஸ்லாமியர்களே. இருந்தாலும் கூட ’பாஷ்டுன் – Pashtun’ என்றழைக்கப்படும் இன்னொரு இஸ்லாமியப் பிரிவினர் தங்களை உயர்வானவர்களாகக் கருதிக்கொண்டு தங்களிடம் ஆட்சி-அதிகாரம் வந்தவுடன் ’ஹசாரா’ பிரிவினர் மீதே குறி வைத்து தாக்குகின்றனர்; கொல்கின்றனர். 

இதேபோன்று தான் கொடியன்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காசிலிங்கபுரம், ஆலந்தா போன்ற 20க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் உடைமைகளை முற்றாக அழித்து, அதன் மூலம் அவர்கள் நெஞ்சிலே ஒரு அச்சத்தையும், உயிர் பயத்தையும் உருவாக்கி, நிரந்தரமாக அடிமையாக்குவது அல்லது மீறினால் அழித்தொழிப்பது என்ற இன்னொரு இனக்குழுவின் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே ஆகஸ்ட் 31 கொடியன் குளம் அழித்தொழிப்பு ஆகும்.

அந்த யுத்த தந்திரம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அன்று 20 கிராமங்கள் மட்டும் அழிக்கப்பட்டு இருக்காது; அந்த பெரிய சமுதாயம் அடுத்த 100 ஆண்டுக் காலத்திற்கும் தனது அடையாளத்தை முற்றாக இழந்திருக்கும். இன அழிப்புக்கு நிகரான வகையில் அந்த சமுதாயம் இருந்த இடமே இல்லாமல் கூடப் போயிருக்க வாய்ப்பு உண்டு.

இது வெறும் காவல் துறை அத்துமீறல், அரச பயங்கர மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி இன ரீதியாக ஒரு பிரிவினர் மீது தொடுத்த ‘அராஜகப் போர்’ என்பதை இந்தியத் தேசம் முழுவதும் எட்டுத் திசைக்கும் உரக்கப் பேசி; அதை உலகிற்குப் படம்பிடித்துக் காட்டியதால் அன்று கொடியங்குளமும் தப்பியது; தேவேந்திர குலமும் தப்பியது; அதனால் இன்று தனது அடையாளத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.

அன்று கொடியன்குளம் வீழ்ந்த போது வாளேந்தி வந்தது யார்? என்பதையெல்லாம் அறிந்தா? அல்லது அறியாமலா? இன்று யார் யார் பின்னாலோ அணிவகுத்துச் செல்கிறார்கள்.  ’கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் தான் கடக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும்’ என்பதற்கு இணங்க கொடியன்குளம் சம்பவம் திரையில் படமாகப் பார்த்து அகமகிழ்ச்சி கொள்வதற்கானது அல்ல, அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு இந்த சமுதாயம் தாங்கள் இன்று அனுபவிக்கக்கூடிய அரைகுறை சுதந்திரத்திற்கும், அடையாளத்திற்கும் இடைப்பட்ட இந்த 26 வருடத்தில் எத்தனை போராட்டங்கள்; இன்னல்கள்; தியாகங்கள் யாரால் நடைபெற்றது? என்பதை உணர வேண்டும்.

எல்லாம் முடிந்து போய்விட்டது; நமக்கு எதிரியே இல்லை என்று நினைப்பது திரைப்பட காட்சிக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை பாடம் என்பது வேறு; அரசியல் பாடம் என்பது வேறு. இன்று இருக்கக்கூடிய அரை சுதந்திரம் கொஞ்சம் நாட்களாவது நிலைத்து நீடிக்க வேண்டுமென்றால் சமுக ஒற்றுமையை, உணர்வுகளை விலைக்கு விற்கக்கூடாது. ஆட்சி-அதிகாரத்தை இழந்தவர்கள் வல்லரசுகளின் தாக்குதலைத் தாண்டி, 20 வருடங்களுக்கு பிறகும் அரசியல்-அதிகாரங்களைப் பிடிக்க முடியும் என்பது கசப்பான படிப்பினையாக இருந்தாலும் கூட அதுவே, ஆப்கானிய தலிபான்கள் தேவேந்திர குல வேளாளர்களுக்குச் சொல்லும் பாடமாகும்.

 ஆகஸ்ட்-31 கொடியன்குளம் நிகழ்வுகள் கண்ணீர் சிந்துவதற்கும், புலம்புவதற்குமானது அல்ல. அதன்மூலம் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொண்டு இழந்த அதிகாரத்தையும்-வாழ்க்கையையும் மீட்டெடுக்க அப்பழுக்கற்ற பற்றோடும், விசுவாசத்தோடும், அர்ப்பணிப்போடும் ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களும் எழுந்து வந்தால் மட்டுமே அவர்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்க முடியும்.

1995-ல் அல்லல்பட்டோர் ஆயிரமாயிரம், இன்றைய தலைமுறையினர் அதையெல்லாம் மறந்துவிட்டு அலைபேசிகளில், கிளப்-ஹவுஸ்களில்; வாட்ஸ்-அப்பில் அளவளாவியும்; மனுக்கள் கொடுத்தும்; மண்டியிட்டும்; அண்டிப் பிழைத்தும்; புகழ்பாடியும்; தற்பெருமை பேசியும்; ஆயிரம் குழுக்களாக பிரிந்தும் கிடப்பதால் எந்தவொரு இனத்தின் அடையாளத்தையும் யாராலும் மீட்க முடியாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே அவற்றை முழுமையாக மீட்கவும் முடியும்; அவற்றை நிலைநிறுத்திக் கொள்ளவும் முடியும்.

அதிகாரம் வேண்டுமென்போர் அரசியல்-அதிகாரத்தை வென்றெடுக்க ஆயத்தமாகி வாருங்கள் !

அன்றும் அரச பயங்கரவாதத்தை துணிச்சலோடு எதிர்த்து நின்று; இன்றும் தலைவணங்காமல் வாழும் கொடியன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 31-கொடியன் குளம் அழித்தொழிப்பு

ஒரு படத்திற்கான கருவல்ல!

ஒரு சமுதாயத்தின்  விடியலுக்கான, அடையாளத்தை-அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான  பாடம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக