புதன், 18 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் “ மக்கள் விசாரணை மன்றம் - மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை” நிகழ்ச்சி - கே.பாலகிருஷ்ணன்


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 ஆகஸ்ட் 17-18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமை தாங்கினார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர்கள் உ.வாசுகி,  பி.சம்பத் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்களும் மாநிலக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று (18.8.2021) கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் விளக்கினார். இச்சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

தீர்மானம் 1 தமிழ்நாட்டில் 1000 இடங்களில் “ மக்கள் விசாரணை மன்றம் -  மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை” நிகழ்ச்சி - செப்டம்பர் இறுதியில் ரயில் மறியல்

 மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, விவசாயத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டங்களை நிறைவேற்றுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தின் மூலம் மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கச் செய்வது, தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அரசின் கொள்கைகளில் மாற்றம் செய்வது, மதவெறி நடவடிக்கைகளை  மேலும் அதிகமாக முன்னெடுப்பது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கிறது ஒன்றிய அரசு. பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. 

வேலையின்மை அதிகரித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதங்கள் இன்றியே பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி, அரசின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நடத்திடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 இந்நிலையில், தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் மாதத்தில், மாநகரங்கள், நகராட்சிகள், ஒன்றியங்கள், சிற்றூர்கள் என ஆயிரக்கணக்கான இடங்களில் "மக்கள் விசாரணை மன்றத்தில் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்" எனும் நிகழ்வை சக்தியான முறையில் நடத்துவது என மாநில குழு தீர்மானித்துள்ளது. இந்நிகழ்வு பாஜக ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக அமையும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் 10 நாட்கள் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கம் நடைபெறும். செப்டம்பர் மாத இறுதியில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் இவ்வியக்கத்தில் தமிழக மக்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் எனவும் ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 2: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் (Integrated Vaccine Complex) கோவிட் தடுப்பூசி தயாரிப்பை உடனடியாகத் துவக்கிட வேண்டும்

 செங்கல்பட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு IIஆல் 2012-ல் துவக்கப்பட்டு ரூ.700 கோடி செலவிடப்பட்டு, 2017லேயே கட்டுமானப் பணிகள் நிறைவிடைந்து விட்டன. பொதுத்துறை நிறுவனமான HLL Biological Ltd ஆல் தடுப்பூசி உற்பத்தியைத் துவக்கிட, மேலும் ரூ.300 கோடி தேவைப்படுகிறது. இங்கு கோவிட் தடுப்பூசி உட்பட 11 வகை நோய்களுக்கு தடுப்பூசி தயாரிக்க முடியும். கோவிட் மூன்றாவது அலையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்? எப்போது உச்சம் தொடும்? போன்ற கேள்விகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது ஒன்றே, கோவிட் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் வழி. சீரம் இன்ஸ்டியூட் மற்றும் பாரத் ப்யோடெக் போன்ற தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை மட்டும் நம்பி, நாம் இந்த இலக்கை அடைய முடியாது. இந்த நிலையில் வருடத்திற்கு 58.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியைத் துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 ஏற்கனவே தமிழக அரசு இந்நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான உரிமம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கி உற்பத்தியை துவக்க உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது. தொடரும் தடுப்பூசிப் பற்றாக்குறையைப் போக்குவதற்க்கு இந்த நடவடிக்கையை உடனடியாகக் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 3 தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் அனைவரையும்

தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

 தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய முறையிலும்  பணியாற்றி வருகிறார்கள். மருத்துவர்கள் செவிலியர்கள் என ஆயிரக்கணக்கானோரும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களும், அரசு அலுவலகங்களில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும், உள்ளாட்சியில் தூய்மை பணியாளர்களும், மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகளிலும் நீண்ட காலமாக தொகுப்பூதிய முறை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் அனைவருக்கும் ஏற்கனவே, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும், மேலும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது. 

 வேலைவாய்ப்பின்மை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிற சூழலில், அதை குறைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என அறிவித்திருக்கும் பின்னணியில், முதற்கட்டமாக இத்தகைய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 4: தமிழகத்தில் மக்களிடையே பகைமையை விதைக்க முயற்சிக்கும் பாஜகவிற்கு கண்டனம்

 தனது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தி வரும் பாஜக, தமிழகத்திலும் அத்தகைய முயற்சியை துவக்கி இருக்கிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்க வேண்டும் எனும் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் முதற்கட்டமாக ஒரு சிலருக்கு பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. பரவலாக தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இம்முயற்சிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்திலும், சாதியக் காழ்ப்புணர்ச்சியோடும் மோசமான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட முயல்கிறது பாஜக. சமூக ஊடகங்களிலும், பேட்டிகளிலும் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளை சார்ந்தவர்கள் இதற்கு எதிராகவும், மக்களிடையே பகைமை உணர்வை தூண்டிவிடும் வகையிலும் பேசி வருகின்றனர். 

 அதே போல இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் விஷயத்திலும் அரசியல் உள்நோக்கத்தோடு பிரச்சாரம் செய்வதோடு உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பியும் வருகின்றனர். மிக நீண்டகாலமாக, சாதி மத அடையாளங்களை கடந்து, சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிற தமிழக மக்களிடையே இத்தகைய பகைமை உணர்ச்சிகளை தூண்டி விடுகிற பாஜகவின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 மேலும் வகுப்புவாத கண்ணோட்டத்தோடு தனது குறுகிய அரசியல் லாபத்திற்காகவும் முன்னெடுக்கப்படும் இத்தகைய முயற்சிகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் சமூக மத நல்லிணக்கத்தை மேலும் உறுதியாக முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறையை நடைமுறைபடுத்திட வேண்டும்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்காக உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் மேயருக்கான தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இத்தகைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிற போது, பேரூராட்சி, நகராட்சிக்களுக்கான தலைவர்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கான மேயர் ஆகியோரை நேரடியாக மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டுமெனவும், அதற்கேற்ப முறையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 6 கோவை அன்னூர் ஒட்டர்பாளையம் சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்திடுக, உண்மைகளை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் 6.8.2021 அன்று நடைபெற்ற சம்பவத்தை முழுவதும் ஒளிப்பதிவு செய்த போலி ஊடகவியலாளர் ஒரு சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது, முதல் கட்ட தகவல்கள் அடிப்படையில் சாதிய வன்கொடுமை என்ற வகையில் அதனை ஊடகங்களும் பதிவு செய்தன. இதன் காரணமாக வன்கொடுமை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பாக விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதிய ஒளிப்பதிவு காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது, அதில் தனது நிலத்தின் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலகம் சென்ற விவசாயியை கிராம உதவியாளர் தாக்கி உள்ள காட்சி பதிவு ஆகி உள்ளது.  முழு சம்பவத்தையும் பதிவு செய்திருந்த நபர், முதலில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார். சுய ஆதாயத்திற்காக தவறான உள்நோக்கத்தோடு சமூக அளவில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அரசு அமைத்த விசாரணைக்குழு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்  ஆகியோர் உண்மை சம்பவத்தை மறைத்துள்ளனர். இச்சம்வத்தில் மாநில முழுமையான விசாரணை நடத்தி தவறான ஒளிப்பதிவு காட்சி வெளியிட்ட நபர்கள் மீதும் உண்மை சம்பவத்தை மறைத்த அரசு ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.

தீர்மானம் - 7  2022 பிப்ரவரியில் மதுரையில் 23வது மாநில மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு 2022 ஏப்ரலில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள கட்சிக் கிளைகள், ஒன்றிய, நகர, இடை குழுக்கள், மாவட்ட குழுக்களின் மாநாடுகள் நடைபெற துவங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது  மாநில மாநாட்டை  2022 பிப்ரவரி மாதத்தில் மதுரை மாநகரில் நடத்துவது என மாநில குழு முடிவு செய்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக