வியாழன், 19 ஆகஸ்ட், 2021

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ்-க்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ்-க்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கட்டமைப்புக்குள் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். 2021 பிப்ரவரியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

முன்மொழிதல் கோரிக்கையின் வாயிலாக அடையாளம் காணப்படும் உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் $100,000 வரையும், ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ் சுமார் $400,000 வரையும் நிதி வழங்க உறுதியளித்துள்ளன.

உட்புற மற்றும் வெளிப்புற ஆராய்ச்சி மூலம் உயிரி மருத்துவ ஆராய்ச்சியை ஐசிஎம்ஆர் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாட்டில் ஊக்குவிக்கிறது. இந்திய நிறுவன சட்டம், 2013-ன் 8-ம் பிரிவின் கீழ் லாப நோக்கில்லாத அமைப்பாக ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக