சனி, 28 ஆகஸ்ட், 2021

கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். - தோழர் உ.வாசுகி


 கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம்  மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்முறை கடந்த காலத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை. குடும்பம் என்கிற "புனிதமான" அமைப்புக்குள் சட்டமும் அரசாங்கமும் தலையிடக் கூடாது என்கிற வாதங்கள்தான் முன்வைக்கப்பட்டன. 

பெண்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலகட்ட போராட்டங்களுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் பிறகுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்பது கொண்டுவரப்பட்டது. 

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் பாலியல் ரீதியான வன்முறை என்பதும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்டு இருந்தது. எனவே கணவனாக இருந்தாலும் மனைவி மீது பாலியல் வன்முறையை நிகழ்த்தினால் அது சட்டப்படி குற்றம் என ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் நீதிமன்றம் இதை கணக்கில் எடுத்து இருக்க வேண்டும். 

நிர்பயா மீதான பாலியல் வன்முறையின் தொடர்ச்சியாக அவர் மரணம் என்பது நிகழ்ந்து வலுவான வெகுஜன கண்டனத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட வர்மா கமிஷன் அறிக்கையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த மனு அளிக்கப்பட்டு, நீதிபதி வர்மாவுடன் விவாதிக்கப்பட்டது. அதில் ஒரு கோரிக்கையாக திருமண உறவுக்குள் பாலியல் வல்லுறவு என்பதும் இடம் பெற்றிருந்தது. 

வர்மா கமிஷன் தனது அறிக்கையில் திருமணம் என்பது கணவனுக்கு மனைவியுடனான வரம்பற்ற பாலியல் உறவுக்கு உரிமம் வழங்கவில்லை எனவும், பாலியல் வல்லுறவு  உணர்வுகளின் அடிப்படையில் மட்டும் நடப்பது கிடையாது, அது அதிகாரத்தின் வெளிப்பாடு எனவும் உறுதியாக குறிப்பிட்டு, அது குற்றமாக கருதப்பட வேண்டும் என்கிற பரிந்துரையை  முன்வைத்தது. அன்றைய அரசாங்கம் அதை ஏற்கவில்லை. அப்போதே அதனையும், வேறு பல குறைபாடுகளையும் ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 

அன்றாட குடும்ப சச்சரவுகள் காரணமாக மிக லேசாக மனைவி, கணவன் மீது இந்த குற்றச்சாட்டை எடுத்ததற்கெல்லாம் முன்வைப்பார்  என்பன போன்ற வாதங்களை காரணம் காட்டி இதை குற்றமாக்க மறுக்கக்கூடாது. 

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வந்துவிட்டது என்பதற்காக தினசரி எந்த மனைவியும் காவல்நிலையத்திற்கு ஓடுவது கிடையாது. எனவே இது சட்டமாக்கப்பட்டாலும் அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி நிகழுமானால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சட்டத்திற்குள் உள்ளடக்கலாம். 

வல்லுறவு என்பது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெருமளவு உளைச்சலையும், வலியையும் ஏற்படுத்தக்கூடிய விஷயம். கணவனால் நடத்தப்பட்டாலும் மனைவிக்கு அந்த பாதிப்பு இருக்கும் என்பதை ஊடகங்களில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில் பெண்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜனநாயக மாதர் சங்கத்தோடும் பெண்கள் இத்தகைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சத்தீஸ்கர் நீதிமன்றம் கணக்கில் எடுக்க வேண்டும். 

குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்து விடுமென பயப்படுகிறவர்கள் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்த முன்வர வேண்டும். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இந்த கட்டமைப்பை பாதுகாப்பது பெண்ணுக்கான பொறுப்பு என்று தள்ளிவிடுவதே ஓர் ஆணாதிக்க பார்வைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக