வியாழன், 19 ஆகஸ்ட், 2021

செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நேரடியாக வகுப்பு! மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க இதுதான் சரியான வழி! - கி.வீரமணி

 செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நேரடியாக வகுப்பு!

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க இதுதான் சரியான வழி!

முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்!- கி.வீரமணி

தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறந்து, முன்புபோல வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதை மிகவும் ஆவலாகவும், ஆர்வத்துடனும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்த்து உள்ளனர்.

என்னதான் ‘ஆன்லைன்’ வகுப்புகளை நடத்தினாலும், ஆசிரியர்களுடன் நேருக்கு நேர் பாடம் கேட்டு, சக மாணவத் தோழர்களுடன் அமர்ந்து, ‘இளமையிற் கல்’ என்பதை இன்பமான அனுபவமாகப் பெறுவதுபோல் அது அமையாது என்பது உண்மையே!

எல்லா கிராமங்களிலும் ‘ஆன்லைனில்’ வகுப்புகளில் பாடம் கற்க, கைப்பேசிகளைப் பயன்படுத்தும்போது, போதிய இணைப்பு இன்றி அவதியுறுபவர்கள் பெரிதும் அம்மாணவர்கள் தாம் என்னும்போது, இது ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்!

பள்ளிக்கூடம் சென்று, சக மாணவர்களிடையே கலகலப்புடன் கூடி மகிழ்ந்து வீடு திரும்பும்போது, ஒருவகைப் புத்துணர்வு ஏற்படும், பல மாதங்கள் வீட்டில் தனியே அமர்ந்துள்ளது மாணவர்களுக்குப் பெரிதும் மன அழுத்தத்தை (விமீஸீtணீறீ ஷிtக்ஷீமீss) ஏற்படுத்தவே செய்கிறது.

பரவிவரும் இரண்டாம் அலை, அச்சுறுத்தும் டெல்டா பிளஸ் வைரஸ் போன்றவற்றால் கரோனா கொடுந்தொற்றிலிருந்து மாணவச் செல்வங்களின் உயிர் காத்து, உடல்நலம் பேணிட, தவிர்க்க முடியாது பல மாதங்கள் பள்ளிகள் மூடப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது - அரசுகளைக் குறைகூற முடியாது.

நேரடியாக செப்டம்பர் ஒன்றுமுதல் 9-12 ஆம் வகுப்பு

இப்போது, வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான வகுப்புகளை நடத்த, பள்ளிகளைத் திறக்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி அவர்கள் - அவருடைய துறை அதிகாரிகளோடு கலந்து பேசியதுடன், ஏராளமான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளில் மேற்கண்ட வகுப்புகளில் நேரில் வந்து கலந்து, மாணவர்கள் பாடம் படித்துப் பயனடையும் ஏற்பாடுகளைச் செய்ய அறிவித்துள்ளது - வரவேற்கத்தக்கது.

முதலமைச்சரின் ஆணையை எதிர்பார்த்து அதற்குமுன் தாங்கள் ஆயத்தமாக உள்ளோம் என்று அறிவிக்கும் வகையில், சில நல்ல கட்டுப்பாட்டு முறைகளை அறிவித்திருப்பது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. சுழற்சி முறையில் 50 விழுக்காடு அளவுக்கு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.

2. அனைத்துப் பள்ளிகளிலும் கிருமி நாசினி வைக்கப்பட்டு, வாரம் ஒருமுறை மாணவர்களை, ஆசிரியர்களை பரிசோதனை செய்தல். காய்ச்சல் உள்ளவர்களை அனுமதிக்காமல் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ அனுப்புதல்.

3. வகுப்புகளில் ஒரு மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் 6 அடி இடைவெளி என்ற தனி நபர் இடைவெளியைக் கண்டிப்பாக செயல்படுத்துதல்.

(இதனைக் கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யக்கூடும்).

4. பள்ளி வளாகத்தில் எங்கேயும் எச்சில் துப்பக்கூடாது.

- இதுபோல தேவைப்படும் அத்துணை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் ஆகியவை வரவேற்கத்தக்கவை.

சுமார் ஓராண்டுக்குமேல் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பற்ற நிலை -கரோனா காலத்தால் திணிக்கப்பட்டு விட்டது.

பெரிதும் குறைந்துவரும் நிலையில், தடுப்பூசி இரண்டும் போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மட்டுமே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்கவேண்டும்.

நம்மிடமே பல பெற்றோரும், கல்வி, சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பள்ளிகள் மூடி இருப்பது எவ்வகையிலும் விரும்பத்தக்கதல்ல என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ்நாட்டின் தனிமுத்திரை!

முகக்கவசத்தை சரியாக மாணவர்கள் அணிந்துகொண்டு வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்களைக் கேட்பதும், பள்ளிகளிலேயே சோப்புப் போட்டு கைகழுவும் முறையையும் வகுப்புக்கு வெளியே தண்ணீர் வசதிகளைச் செய்து தருதல், கழிப்பறைகளை மிகமிகத் தூய்மையாக வைத்திருப்பதும் முக்கியம்.

எனவே, இனியும் காலந்தாழ்த்தாது, வரும் செப்டம்பர் முதல் நாள்முதல், மூத்த வகுப்பு மாணவர்கள், வகுப்புகளுக்குச் சென்று பாதுகாப்புடன் வீடுகளுக்குத் திரும்பச் செய்வதன்மூலம், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் தனி முத்திரை பதிப்புத் தொடரும்!

முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்!

மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாடம் எடுத்தால், அவர்களே குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு முறைகளை - தடுப்பு முறைகளைத் தவிர்க்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுப்பார்கள் என்பது உறுதி!

முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக