சனி, 28 ஆகஸ்ட், 2021

டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு வலுவூட்டும் விதத்தில் ‘5ஜி மற்றும் சைபர் பாதுகாப்பு’ குறித்த பயிற்சி நிகழ்ச்சியை தொலைதொடர்பு செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் தொடங்கி வைத்தார்


 டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கு வலுவூட்டும் விதத்திலும், 5ஜி-யின் சக்தி குறித்து பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலுவலர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், சைபர் பாதுகாப்பு குறித்த கலாச்சாரத்தை உருவாக்கவும், தொலைதொடர்பு துறையின் திறன் வளர்த்தல் அலகான கொள்கை ஆராய்ச்சி, புதுமைகள் மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைதொடர்பு நிறுவனம், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கான ‘5ஜி மற்றும் சைபர் பாதுகாப்பு’ குறித்த ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சியை 2021 ஆகஸ்ட் 27 அன்று நடத்தியது. தொலைதொடர்பு துறை செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் இதை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 5ஜி-யின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, அனைத்து துறைகளிலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். 5ஜி மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த அடிப்படை விஷயங்களை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்திய செயலாளர், பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக கொள்கை ஆராய்ச்சி, புதுமைகள் மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைதொடர்பு நிறுவனத்தை பாராட்டினார்.

25-க்கும் அதிகமான மத்திய அமைச்சகங்களின் இணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள பொறுப்புகளில் உள்ள 65-க்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சைபர் பாதுகாப்பு மற்றும் 5ஜி குறித்தும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அவற்றின் பயன்பாடு பற்றியும், தங்களது துறைகளில் கொள்கைகளை வடிவமைக்கும் போது அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக