திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கொவிட் நிவாரணப் பொருட்களுடன் வியட்நாமில் உள்ள ஹோ சி மின் (HO CHI MINH) நகரத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் (INS AIRAVAT) கப்பல் சென்றடைந்தது


 சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக, கொவிட் நிவாரணப் பொருட்களுடன் வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் ஆகஸ்ட் 30, 2021 அன்று சென்றடைந்தது. கொரோனாவிற்கு எதிரான போரில் வியட்நாம் அரசின் தேவைக்கேற்ப ஐந்து ஐஎஸ்ஓ கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், 300 பிராணவாயு செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இக்கப்பல் எடுத்துச் சென்றது.

விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்கரை பிரிவின் கீழ் செயல்படும் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், கொவிட் நிவாரணப் பொருட்களுடன் தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் 24 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள டன்ஜுங் பிரியாக் துறைமுகத்திற்கு சென்ற இந்த கப்பல், அந்நாடு கேட்டுக் கொண்டவாறு 10 திரவ மருத்துவ ஆக்சிஜன் கொள்கலன்களை எடுத்து சென்றது. 

இந்திய அரசின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) லட்சியத்தின் கீழ், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இந்தியக் கடற்படை, தெற்கு/தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட இந்திய பெருங்கடலின் ஒட்டுமொத்த பகுதியிலும் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

வலுவான பாரம்பரிய நட்பை பகிர்ந்து கொண்டு வரும் இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகள், பாதுகாப்பான கடல் பகுதிக்காக இணைந்து பணியாற்றி வருகின்றன. நீர்மூழ்கி கப்பல், வானூர்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் விரிவான பயிற்சி நடவடிக்கைகளில் இரு கடற்படைகளும் இணைந்து ஈடுபட்டு வருகின்றன. நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல் தற்போது அந்நாட்டுக்கு சென்றிருப்பதன் மூலம் இந்த உறவு மேலும் வலுப்படும்.

மருத்துவ பொருட்களை அங்கு இறக்கிய பிறகு, பிராந்தியத்தில் உள்ள இதர நட்பு நாடுகளுக்கு சாகர் இயக்கத்தின் கீழ் மருத்துவ பொருட்களை இக்கப்பல் எடுத்துச் செல்ல உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக