செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும்.- திரு நிதின் கட்கரி


 தேசிய பணமாக்கல் திட்டம் கட்டுமானத் துறையினரிடையேயும், நிதி நிறுவனங்களிடையேயும் நம்பகத்தன்மையும், நம்பிக்கையையும் கட்டமைக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இயக்க ஆற்றலை மாற்றியமைப்பது தொடர்பான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், தேசிய பணமாக்கல் திட்டத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி இலக்குடன் சாலைகள் 26 சதவீதப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

பிரதமரின் தேசிய மாஸ்டர் திட்டமான ‘கதி சக்தி' திட்டத்தை அரசு விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்தினால் மிகப்பெரும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.  உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்களுக்கான தொகையை ரூ. 5.54 லட்சம் கோடியாக 34 சதவீதம் அரசு உயர்த்தியிருப்பதன் மூலம் பொருளாதாரம் சீரடைந்து வருங்காலத்தில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றார் அவர்.

உள்கட்டமைப்பில் முதலீடுகள் அதிகரிக்கப்படுவதன் மூலம் பொருளாதாரத்தில் தேவை உருவாவது மட்டுமல்லாமல் நிலையான, சம அளவிலான உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம் என்று திரு. நிதின் கட்காரி கூறினார்.

சாலைகள் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சாலைகளை மேம்படுத்துவதில் விரிவான உத்திகள் பின்பற்றப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். வேளாண்மை தான் நமது உண்மையான பலம் என்றும் எரிசக்தித் துறை, கழிவுகளை வளமாகவும் எரிசக்தியாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக