ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இடங்களுக்கு கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து கல்வி நிலையங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.- திரு எம் வெங்கையா நாயுடு


 நமது செழுமையான கடந்தகாலம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டிய தேவை குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். இளம் தலைமுறையை ஊக்குவிப்பதற்காக கிருஷ்ணதேவராயர் போன்ற பேரரசர்களின் வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

விஜயநகரப் பேரரசின் முன்னாள் தலைநகரமான கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியை பார்வையிட்ட பின்னர் முகநூலில் பதிவிட்ட குடியரசு துணைத் தலைவர், நமது வளமிக்க மற்றும் துடிப்புமிக்க கடந்த காலத்தை வரலாற்று சிறப்புமிக்க அந்த இடம் நினைவுபடுத்துவதாக கூறினார்.

"நமது வளமான மற்றும் சிறப்பான பாரம்பரியம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இடங்களுக்கு கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து கல்வி நிலையங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.  

யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய தலமான ஹம்பியின் பிரமாண்டம் மற்றும் அழகு குறித்து புகழாரம் சூட்டிய திரு நாயுடு, வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு தாம் மேற்கொண்ட பயணம் நமது முன்னோர்களின் விசாலமான பார்வை மற்றும் திறமைகள் குறித்த பெருமையை தமக்கு ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

கோட்டைகள், மாளிகைகள் கோயில்கள் மற்றும் சந்தைகளின் மிச்சங்கள் விஜயநகர பேரரசின் பெருமையை பறைசாற்றுவதாக திரு நாயுடு தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஹம்பியில் உள்ள ஒவ்வொரு நினைவுச் சின்னமும் பிரத்தியேகமாக உள்ளது என்றும், பார்ப்பவர்களை அது பரவசமடைய செய்வதோடு, கம்பீரமான கலாச்சார சிறப்பை பிரதிபலிப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக