ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

உத்தரகாண்டில் உள்ள தரசு-கங்கோத்ரி சாலை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் நடவடிக்கை


 உத்தரகாண்டில் உள்ள தரசு-கங்கோத்ரி சாலை கட்டமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தொழிலாளர்களின் (சிபிஎல்) குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கான பணியை எல்லையோர சாலைகள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கைபேசி இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் அதிகாரிகளும்,  மேற்பார்வையாளர்களும் உயரம் மிகுந்த இந்த பகுதியில் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பெற்றோர்கள் பணியில் இருக்கும் போது குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை வழங்கி அவர்களை கல்வியில் ஈடுபடுத்துவதற்கான சிந்தனை உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு பொறுப்பேற்றுள்ள இளநிலை பொறியாளர் ராகுல் யாதவ் மற்றும் சுபேதார் சந்தேஷ் பவார் ஆகியோருக்கு உதித்தது.

2021 ஜூலை 21 முதல் ஜாங்க்லா, இந்தோலிகர் மற்றும் நாகா ஆகிய மூன்று முகாம்களில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 60 முதல் 70 குழந்தைகள் வரை வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். கூஞ்ச் எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இக்கழந்தைகளுக்கு  உடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணியிலும் எல்லையோர சாலைகள் நிறுவன அதிகாரிகள் முனைப்புடன் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த முன்னெடுப்பை மேலும் மேம்படுத்தும் விதத்தில், குழந்தைகளுக்கு அடிப்படை தங்கும் வசதி மற்றும் சிறப்பான கற்பிக்கும் வசதிகள் ஆகியவற்றை வரும் மாதங்களில் உருவாக்கவும் சாலைகள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

காஷ்வல் பெய்டு லேபரர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தொழிலாளர்கள், முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப்பகுதி சாலைகளை கடினமான பகுதிகளில் கட்டமைப்பதற்கு எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். தங்களது இல்லங்கள் மற்றும் சமூகங்களில் இருந்து நீண்ட காலம் பிரிந்திருந்து இப்பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக