வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

உண்மை தன்மை குறித்து போதிய புரிதல் இல்லாமல் தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

அச்சிடப்படாத சிறிய அளவிலான ஆய்வை மேற்கோள் காட்டி, ஆயுர்வேதத்திற்கு எதிராக, குறிப்பாக ஆயுஷ் அமைச்சகத்திற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன. பல்வேறு ஆய்வுகள் மற்றும் பல தரப்பு மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் கொவிட்-19 சிகிச்சை மற்றும் மேலாண்மையில் பயனளிக்கும் மூலிகையான ஆயுஷ் 64 பற்றி இந்த ஒருதலைப்பட்சமான தவறான செய்தி அமைந்துள்ளது.

இன்னும் வெளியிடப்படாத ஒரு ஆய்வை மேற்கோள்காட்டி, அலோபதி மற்றும் ஆயுர்வேதத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய பணிக்குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் கடுமையான உழைப்பிற்கு ஊடக செய்திகள் களங்கம் ஏற்படுத்துகின்றன. இந்தக் குறிப்பிட்ட ஆய்வு, ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் மற்றும் ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்டதாகும். புகழ்பெற்ற மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளில் கற்றல் மற்றும் ஆராய்ச்சியின் மிகச்சிறந்த மையங்களாக விளங்கும் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ஆய்வின் முடிவு குறித்து தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதற்கு  கண்டனம் தெரிவித்துள்ளன.

ஊடகத்தில் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள டாக்டர் ஜெய்கரன் சரணின் கருத்தை அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், “ஆயுஷ் 64 மருந்து, தரமற்றது என்றோ அல்லது பயனில்லாதது என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக, ஆயுஷ் 64 மருந்து மிகச்சிறந்த பயனளிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளும் வகையில் ஆயுஷ் 64 மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று ஆய்வு முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன”, என்று கூறியுள்ளார்.

உண்மை தன்மை குறித்து போதிய புரிதல் இல்லாமல் தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக