வியாழன், 19 ஆகஸ்ட், 2021

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டிய துறைகளை அடையாளம் காணும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.- பியூஷ் கோயல்


 ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து,  ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து, ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்கள், பொருட்கள் வாரியங்கள், அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருடன்  மும்பையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

வணிகப் பொருட்கள் ஏற்றுமதியை, மிகப் பெரிய அளவில் அதிகரிப்பதை நோக்கி நாடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அமைப்பு மாற்றங்களால் இது சாத்தியமாகியுள்ளது. உள்ளூர் பொருட்களை உலகத் சந்தைக்கு கொண்டு செல்லவும், உலகத்துக்காக, இந்தியாவில் தயாரிக்கவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதால், 2021-22ம் நிதியாண்டில் வணிக பொருட்களின் ஏற்றுமதி இலக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடைய அனைத்து ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 8 மாதங்களுக்கு, தலா 34 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் ஏற்றுமதியின் அளவை நாம் பராமரிக்க வேண்டும். அனைத்து ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்களும் மற்றும் அதன் உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்த லட்சிய இலக்கை அடைவது சாத்தியம்.

2030ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காகவும் ஏற்றுமதி துறையினர் பணியாற்ற வேண்டும். இதில்  1 டிரில்லியன் டாலர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ஒரு டிரில்லியன் டாலர் சேவைகள் ஏற்றுமதியும் அடங்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டிய துறைகளை அடையாளம் காணும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இதர நாடுகளுடனும், இதே போன்ற ஒப்பந்தம் மேற்கொள்ள உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக