ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கொவிட்-19 தடுப்பூசியின் சோதனை வசதியை அதிகரிப்பதற்காக இரண்டு தன்னாட்சி நிறுவனங்களை மத்திய மருந்து ஆய்வகங்களாக தரம் உயர்த்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.


 பொதுநலன் கருதி, கொவிட்-19 தடுப்பூசியின் சோதனை வசதியை அதிகரிப்பதற்காக இரண்டு தன்னாட்சி நிறுவனங்களை மத்திய மருந்து ஆய்வகங்களாக தரம் உயர்த்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி உயிரி தொழில்நுட்பத் துறையின் அமைப்புகளான ஐதராபாத்தில் உள்ள தேசிய விலங்குகள் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புனேவில் உள்ள தேசிய உயிரணு அறிவியல் மையம் ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவசரகால சூழ்நிலையில் பிரதம மந்திரியின்

குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரண (பிஎம் கேர்ஸ்) நிதி அறக்கட்டளையின் கீழ் இதற்கான நிதி உதவி அளிக்கப்பட்டது.

தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை, தொடர்ந்து  ஆதரவளித்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஐதராபாத் மற்றும் புனேவில் உள்ள நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.

பிஎம் கேர்ஸ் நிதி ஆதரவுடன் தேசிய விலங்குகள் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வகம், ஐதராபாத்தில் உள்ள கொவிட்-19 தடுப்பூசி சோதனைக்கான மத்திய மருந்துகள் ஆய்வகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் 17-ஆம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது. புனேவில் உள்ள நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பு ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு மையங்களிலும் மாதத்திற்கு சுமார் 60 தொகுப்பு தடுப்பூசிகள் சோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நிறுவனங்களும் நாட்டின் தடுப்பூசி உற்பத்தி முனையங்கள் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான தளவாடங்கள் எளிதாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் வாயிலாக தடுப்பூசி விநியோக சங்கிலி வலுப்பெறுவதுடன், இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக