திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தாலிபான்களைப் போல காஷ்மீரைக் கைப்பற்றத் திட்டம்! இந்திய அரசுக்கு மெகபூபாவின் எச்சரிக்கை! தேச விரோத சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி



தாலிபான்களைப் போல காஷ்மீரைக் கைப்பற்றத் திட்டம்!

இந்திய அரசுக்கு மெகபூபாவின் எச்சரிக்கை!

தேச விரோத சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிடிபி (People Democratic Party) என்ற அரசியல் கட்சியின் தலைவரும் மெகபூபா முப்தி அவர்கள் ஆவார். 370வது சரத்தின் படி, ஏறக்குறைய 70 ஆண்டுக் காலத்திற்கு மேலாக காஷ்மீருக்குத்  தனி  உரிமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டு வந்த போதும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும், பிரிவினை வாதமும் இந்திய இறையாண்மைக்கே சவாலாக இருந்தன. முன்னாள் முதல்வர் முப்தி முகமது அவர்களின் மகள் மெகபூபா முப்தி முதல்வராக இருந்த போதும் அங்கு எவ்வித மாற்றமும் நிகழவில்லை;  கல்லெறிகளும் நிற்கவில்லை; பிரிவினைவாத குழுக்களின் செயல்பாடுகளும் குறையவில்லை.

 இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் காஷ்மீருக்கு மட்டும் 370 சரத்தின் கீழ் சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டு வந்ததை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களும், மக்களும் விரும்பவில்லை. 2019 ஆம்  ஆண்டு 370 சரத்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு மற்றும் லடாக் என்ற தனித்தனி யுனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இப்போது மத்திய அரசினுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தவுடன் தீவிரவாத ஊடுருவலும்; கல்லெறி நிகழ்ச்சிகளும்; இந்துப் பண்டிதர்கள் மீதான தாக்குதல்களும், கொலைகளும் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. விரைவில் அங்கு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்துவதற்குண்டான சூழல்கள் மற்றும் தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தான் ஒரு இந்தியப் பிரஜை; அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்; ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பதையெல்லாம் முற்றாக மறந்து விட்டு மெகபூபா முப்தி அவர்கள் காஷ்மீர் பிரச்சினையை ஆப்கான் தலிபான்களோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். 

”ஆப்கானைக் கைப்பற்றிய தலிபான்களின் புதிய உத்வேக எழுச்சியையும், அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கியதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நிலைமை கை விட்டுப் போவதற்கு முன்பாக மீண்டும் ஜம்மு-காஷ்மீரை ஒன்றாக இணைக்கவும்,  370 சரத்தை அமலாக்கவும் மத்திய அரசு உடனடியாக பேச்சு வார்த்தையைத் துவங்க வேண்டும்” என எச்சரித்திருப்பது முழுக்க முழுக்க மத ரீதியாக இந்தியாவை மீண்டும் பிளவுபடுத்த வேண்டும் என்ற அவரது பிரிவினை எண்ணத்தையே காட்டுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கக் கூடியது மட்டுமல்ல,  அவர் சட்ட ரீதியாகத் தண்டிக்கப்பட கூடியவரும் ஆவார்.

இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியல் சாசனம் வழங்கிய எல்லா விதமான உரிமைகளையும், சுதந்திரங்களையும் பெற்று வாழ உரிமை இருக்கிறது. அதே உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கும் இருக்கிறது.

ஆனால், அம்மாநில மக்களின் அன்றாட பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக இந்திய இறையாண்மைக்கே பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் ”ஆப்கானை பாடமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்; இல்லையெனில் காஷ்மீர் கைவிட்டுப் போகும்” என பகிரங்கமாக எச்சரித்து இருப்பது ’ஜனநாயக போர்வை’யில் அவர் ஒளித்து வைத்திருந்த பிரிவினை எண்ணத்தையே வெளிப்படுத்துகிறது.

அவருடைய இப்பிரிவினைவாத பேச்சை அடிப்படையாகக் கொண்டே அவரது அரசியல் கட்சி தடை செய்யப்பட வேண்டும். இது போன்று காஷ்மீர் அரசியல்வாதிகளின் பிரிவினை பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிப்பது எந்நேரமும் ஊடுருவப் பதுங்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானியத் தீவிரவாதிகளுக்கும், ’தனி காஷ்மீர் குழு’க்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும் சூழல் ஏற்பட்டு விடும்.

எனவே, தாலிபான்களைப் போல காஷ்மீரை கைப்பற்றத் திட்டமிடும் மெகபூபாவின் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந்திய அரசுக்கு - 140 கோடி  மக்களுக்கு - எச்சரிக்கை விடும் மெகபூபா மீது தேச விரோத சட்டம் பாய வேண்டும் !

பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சிறிதும் சுணக்கம் காட்டக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக