வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு - மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு - கே.பாலகிருஷ்ணன்


 தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு - மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு 

மைசூரில் கல்வெட்டியல் துறையில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் தமிழுடன் தொடர்புடையவை ஆகும். ஆனால் இந்தக் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு தேங்கியிருப்பதுடன், தற்போது வரை அவற்றை புதுப்பித்து வெளியிடவில்லை. இவ்விசயத்தில் தலையீடு தேவை என மார்க்சிஸ்ட் கட்சி பலமுறை அரசை வலியுறுத்திவந்துள்ளது. 

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வரவேற்கத்தக்க தீர்ப்பினை கொடுத்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய உத்தரவுகள்:

* தமிழோடு தொடர்புடைய கல்வெட்டுக்களை, சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் தொல்லியல் துறையுடைய கல்வெட்டியல் கிளைக்கு 6 மாத காலத்திற்குள் மாற்றிட வேண்டும். 

* சென்னையில் உள்ள கல்வெட்டியல் கிளையின் பெயரை 'தமிழ் கல்வெட்டியல் கிளை' என மாற்ற வேண்டும். 

* தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், மற்றும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் இந்த கிளைக்கு  6 மாத கால அவகாசத்தில் மாற்ற வேண்டும்.

இவை அனைத்துமே தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக அமைந்துள்ளன. மேலும் கூடுதலாக, கல்வெட்டியல் பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளில் போதுமான நிபுணர்களை பணியமர்த்துவதுடன். சென்னை கல்வெட்டியல் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒன்றிய அரசும், மத்திய தொல்லியல் துறையும் தீர்ப்பை மதித்து செயல்பட்டு, உரிய நிதி ஒதுக்கி பணிகளை வேகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக