செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசும் - எம்.பி.,க்களும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.- கி.வீரமணி

 நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்காக மறுவாழ்வு இல்லங்களுக்காக தி.மு.க. அரசு ரூ.317.40 கோடி ஒதுக்கியுள்ளது

‘‘ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்’’ என்ற முதலமைச்சரின் குரல் நம்பிக்கையூட்டுவதாகும்

குடியுரிமைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசும் - எம்.பி.,க்களும் முயற்சிக்கட்டும்! - கி.வீரமணி

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், அவர்களது பாதுகாப்புக்காகவும் கடந்த 35, 40 ஆண்டுகளாக (அதற்கு முன்பும்கூட) களத்தில் நின்று அறவழியில் போராடி வரும் இயக்கம் திராவிடர் இயக்கமாகும்.

உரிமையுடைய உறவு நமது நாடு - குறிப்பாக தமிழ்நாடு!

அகதிகளாக இங்கே வந்து தஞ்சமடைந்த அவர்களுக்குத் தனி உரிமை - மற்ற நாட்டவருக்கு இல்லாத உரிமை தமிழ்நாட்டுக்கு உண்டு - அதுதான் ‘‘தொப்புள்கொடி உறவு’’; நாட்டால் வேறுபட்டாலும் பண்பாட்டால், நாகரிகம், மொழி முதலியவற்றால் அவர்களுக்கு உரிமையுடைய உறவு நமது நாடு - குறிப்பாக தமிழ்நாடு!

அவர்கள் முன்னெடுத்து, முயன்ற நியாயமான வாழ்வுரிமைப் போராட்டக் களத்தில் அவர்கள் பல காரணங்களால் விரும்பிய வெற்றியைப் பெற இயலாத வேதனை - நம் நெஞ்சங்களில் தைத்த முள்ளாகவே இருக்கிறது. நிச்சயம் வரலாறு மாறும்!

வீழ்ந்த இனங்கள் நிரந்தரமாக வீழ்ந்தபடியே இருப்பதில்லை; எழுந்து நிற்கும் திறனும், திருப்பமும் ஏற்படுவது வரலாற்றின் வைர வரிகளில் காணப்படாத செய்தி அல்ல!

‘‘ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்’’

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்குமிடம் சரியான பராமரிப்பின்றி, அவர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகளை அளிக்காது, முந்தைய ஆட்சியில் அவர்கள் எப்படியோ வாழ்ந்த நிலையை மாற்றி, புதிதாகப் பொறுப்பேற்று அவர்களுக்கு விடியலைத் தரும் - விரைந்து வினையாற்றும் நமது முதலமைச்சர் இரண்டு நாள்களுக்கு முன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘‘ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்’’ என்று உரத்த குரலில் முழங்கியது -அவர்களது விசை ஒடிந்த தேகங்களில் வன்மையூட்டியதே!

நம்பிக்கை இழந்து நலிவுற்றவர்கள், பொலிவுற்று மகிழ்ச்சியில் பொங்கி உள்ளார்கள். தொலைக்காட்சி பேட்டிகளில் அந்த ஈழத்துச் சகோதரர்களும், தாய்மார்களும் தங்கள் கண்களில் மகிழ்ச்சியும், நன்றியும் போட்டிப் போட்டுக்கொண்டு வாயார, மனமார முதலமைச்சருக்கும், திராவிட ஆட்சிக்கும் வாழ்த்துக் கூறியது கேட்டு நமக்குப் பெரும் ஆறுதலும், மனநிறைவும் ஏற்பட்டது.

‘‘மறுவாழ்வு விடுதிகள்’’

317.40 கோடி ரூபாய் ஒதுக்கி, இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணிக் காத்திடுவதற்கு - அந்த இல்லங்கள் - விடுதிகள் - அகதிகள் மறுவாழ்வு என்பதில் ‘அகதி’யை அகற்றி, ‘‘மறுவாழ்வு விடுதிகள்’’ என்று பெயர் சூட்டியதன்மூலம் - முதலமைச்சர் அம்மக்களுக்கு ஏற்படுத்திய தன்னம்பிக்கையோடு, தொப்புள்கொடி உறவு என்றும் அறுந்துபடாத - அறுக்கப்பட முடியாத - அறுக்கப்படக் கூடாத உறவு என்பதை உறுதிப்படுத்தி உலகத்துக்கு அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

திராவிடம் என்பதுடன் ‘யாவரும் கேளிர்’ என்பதை வாழ்விலக்கணக்கமாக வாழும் வகை செய்யும் அருந்தத்துவம் என்பதைப் பிரகடனப்படுத்தி விட்டார்!

‘‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!’’

என்ற புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகளை தொப்புள்கொடி உறவுகள் மறக்காது, ஒற்றுமையுடன் செயல்பட இதுபோன்ற ஒரு அரிய வாய்ப்பு - தமிழ்நாட்டில் மறுவாழ்வு - புதுவாழ்வாகவே அமையும் நல்ல வாய்ப்பு எளிதில் கிட்டுமா?

குடியுரிமை பெற்றுத் தருக!

அவர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தர, நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருவது, மனிதாபிமான அடிப்படையில் மிகமிக முக்கியமானதாகும்.

அதனையும் இலக்காக வைத்து அம்மக்களும் எம் மக்களே என்ற நிலையை உருவாக்குதல் முக்கியம்.

மற்ற நாடுகளிலிருந்து ஆதிக்கவாதிகளால் அவதிப்பட்டு வருகின்றவர்களுக்குத் தஞ்சம் என்று குடியுரிமையின்போது குறிப்பிட்ட ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் பேச்சு, இவர்களும் அதே நிலைப்பாட்டுக்குரியவர்கள்தானே என்று சீர்தூக்கிப் பார்க்கும்படி தமிழ்நாடு அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊடகங்களும், கட்சிகளும், தலைவர்களும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது - மானுடநேயத்தின் முக்கிய தேவையாகும்!

எனவே, அதையும் இலக்காகக் கொண்டு இவர்கள் பெறும் வசதிகள் அமையட்டும்!

மாண்புமிகு முதலமைச்சருக்கும், தி.மு.க. ஆட்சிக்கும் நன்றி மேல், நன்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக