புதன், 25 ஆகஸ்ட், 2021

திருமுருக கிருபானந்தவாரியார் பெருமையை தமிழக அரசு உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ஆன்மீகத்தால் அறிவுக் கண்களையும் திறந்தவர்;  அழகு தமிழையும்  ஒருசேர வளர்த்தவர் ’திருமுருக கிருபானந்தவாரியார்’ அவர்கள்!

அவரது பெருமையை தமிழக அரசு உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஆன்மீகத்தால் தமிழை வளர்த்தாரா? தமிழால் ஆன்மீகத்தை வளர்த்தாரா? என வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு 70 வருடங்களுக்கு மேலாக இனிய தமிழ்மொழியில் ஆன்மீகப் பணியை மேற்கொண்டவர் அருள்மிகு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள். ஆகஸ்ட் 25, அவருடைய பிறந்த நாள் இன்று அவரது செம்மார்ந்த பணியை புதிய தமிழகம் கட்சி நினைவு கூருகிறது.  

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றின் கரையில் உள்ள காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் தந்தையார் மல்லையதாசர் – தாயார் கனகவள்ளி அம்மையார் ஆகியோர் ஈன்றெடுத்த 11 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தவர். அவரது தந்தையாரே இவருக்கு ஆசானாக விளங்கி 12 வயதிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பண்களை கற்றுக் கொடுத்தார்.

வாரியார் அவர்கள் தனது பதினைந்தாவது வயதிலிருந்தே ஆன்மீக சொற்பொழிவுகளைத் தனித்தே நிகழ்த்தத் துவங்கினார். ஆன்மீகச் சொற்பொழிவாளர்களில் அவர் மிகவும் வித்தியாசமானவர். அவருடைய பெயரில் இடம் பெற்றுள்ள அடைமொழிக்கு ஏற்ப தனது அனைத்து சொற்பொழிவுகளிலும் முருகனின் பெருமிதங்களை மட்டுமே அதிகம் பேசுவார். அவருடைய சொற்பொழிவைக் கேட்கும் எவரும் பாதியிலேயே எழுந்து போக முடியாத அளவிற்கு பொங்கு தமிழில் எழில் கொஞ்சும் வார்த்தைகளில் பல மணி நேரம் சொற்பொழிவாற்றவும்; வாதமும், எதிர் வாதமும் செய்யவும் வல்லமை படைத்தவர். ஆன்மீகத்தையும், அறிவார்ந்த கருத்துக்களையும் நகைச்சுவையோடு கலந்து தந்தவர்.

அவர் ஒவ்வொன்றிற்கும் தனது சொற்பொழிவில் கொடுத்த விளக்கங்கள் விஞ்ஞான ரீதியாகவும், அறிவுப் பூர்வமாகவும், யாரும் மறுக்க முடியாத அளவிற்கு அறிவுக் கண்களையும் திறக்கும்.  குறிப்பாக முருகன் தன் கையில் வைத்திருக்கும் வேல் என்பதை ஆயுதமாகக் கருதக்கூடாது; அது ’அறிவின் அடையாளம்’. மனிதகுலம் அறிவுடைய சமுதாயமாக இருந்திட வேண்டும் என்பதை தான் முருகன் கையில் இருக்கும் ’வேல்’ உணர்த்துகிறது. வேலின் உயரம் ’அறிவின் ஆழத்தை’யும்; வேலின் மேல் பகுதி அகன்று இருப்பது ‘அறிவு விசாலமாக’ இருக்க வேண்டும் என்பதையும்; வேலின் நுனிப்பகுதி கூர்மையாக இருப்பது ’அறிவுக் கூர்மை’யாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 

எனவே, ஒவ்வொரு மனிதரும் கூர்ந்த, பரந்த,  ஆழமான அறிவுத் திறனோடு  விளங்கிட வேண்டுமென முருகனின் கையில் இருக்கும் வேலாயுதத்தையும், அறிவையும் ஒப்பிட்டு விளக்கி உணர்த்தினார். இது போன்ற விளக்கங்களெல்லாம் அவரின் சொற்பொழிவுகளில் எண்ணிலடங்கா.

70 ஆண்டுகளுக்கு மேலாக உலகமெங்கும் சென்று ஆன்மீக மற்றும் தமிழ் வளர்ப்பை ஒரு சேர நிகழ்த்திய அவருடைய பிறந்தநாளைத் தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். அவருடைய அளப்பரிய தமிழ் மற்றும் ஆன்மீகத் தொண்டை பாராட்டும் வகையிலும், கிருபானந்தவாரியாரின் அர்ப்பணிப்புக்கு புகழ் சேர்க்கும் வகையிலும் மாநில அரசு அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவது மட்டுமின்றி, வேறு விதங்களிலும் அவரது பெருமையை உலக அளவில் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே உலகெங்கும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக