செவ்வாய், 2 நவம்பர், 2021

வனங்களை அம்பானி, அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து நம் வனத்தையும், வளத்தையும் அழிப்பதற்கு ஒன்றிய அரசு துணிந்துவிட்டது.- கார்த்திகேய சிவசேனாபதி



வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில் உள்ள ஆபத்துகள்!

வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின் வரைவை வெளியிட்டு மாநில அரசுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதன் மீதான கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அக்டோபர் 2 முதல் நவம்பர் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வனப் பாதுகாப்பு சட்ட திருத்த வரைவு தமிழில் கடந்த அக்டோபர் 28 அன்று தான் வெளியிடப்பட்டது. ஏறக்குறைய மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும்படி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு தமிழ்நாட்டின் கருத்துகளை புறக்கணிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே நவம்பர் 27 வரை கால அவகாசம் தந்து எங்களின் முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வனப் பாதுகாப்புச் சட்ட திருத்தமானது பல்வேறு ஆபத்துகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகள் 1980களுக்கு முன்பாகவே தங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி, 1980 வனப் பாதுகாப்பு சட்டத்தினால் அதனை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. ஆனால் இனி அந்த நிலங்களை, அவை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக இருந்தாலும் ஒன்றிய அரசின் அனுமதியோடு அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையை புதுச் சட்டம் உருவாக்குகிறது. ஆனால் 1980களுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பற்றிய எந்தத் தரவுகளும் தற்போது இணைக்கப்படவில்லை. அதனை ஒன்றிய வனத்துறை அமைச்சகம் உடனடியாக மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

இரண்டாவதாக வனப் பகுதிகளில் தேயிலை, காபி மற்றும் எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வனத்தின் அடிப்படைத் தன்மைக்கு எதிரான தாவரங்களை வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. மூன்றாவதாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்று வரும்போது வனப் பரப்புகளின் வளத்தினை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக முன்பு பின்பற்றி வந்த கடுமையான நடைமுறைகள் எதுவும் இல்லாமல் உடனடியாக அந்தத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் நடைமுறையையும் இவை உருவாக்குகிறது.

நான்காவதாக காடுகளில் சுரங்கம் அமைத்தல், மலைகளைக் குடைந்து இயற்கை வாயுக்களை உறிஞ்சுதல் உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ள வனங்கள் திறந்து விடப்படுவதாக புதிய சட்டத்திருத்தம் கூறுகிறது. ஐந்தாவதாக வனப் பகுதிகளில் வன உயிரியல் பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தாலும் சுற்றுலாத்தல விரிவாக்கம் ஆகியவை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இதில் அடங்கியுள்ளது. ஆறாவதாக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்ற நிலையைக் கூட அகற்றி அதில் வனத்தின் இயல்புக்கு எதிரான தாவர வகைகளை வளர்த்தி பொருளாதார அடிப்படையில் செயல்பட வழி வகுப்பதாகவும் இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

சட்டத்தின் மேற்கூறிய அம்சங்களைக் காணும் போது வனங்களை அம்பானி, அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து நம் வனத்தையும், வளத்தையும் அழிப்பதற்கு ஒன்றிய அரசு துணிந்துவிட்டது என்ற உணர்வையே தருகிறது. மேற்கூறிய சட்டங்கள் அமலாக்கப்படும் பட்சத்தில் காட்டுயிர்களின் பாதுகாப்பு ஆபத்தாகக்கூடும். பல்லுயிர் சூழல், உயிர்களின் உணவு சங்கிலி ஆகியவை முற்றிலும் பாதிக்கும். காலங்காலமாய் காடுகளைப் பாதுகாத்து வரும் அதன் பூர்வக்குடிகளின் இருப்பு கேள்விக்குறியாகும். காலநிலை மாற்றம் அதனால் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் என இவை நம்மை பெரும் அழிவை நோக்கி இட்டுச்செல்லும். எனவே, உடனடியாக இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். முன்பை விட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தற்போதைய நிலையில் அவற்றில் கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்று ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக