புதன், 4 ஆகஸ்ட், 2021

100 நாள்கள் கூட ஆகாத ஓர் ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் நடத்துவது எவ்வளவு விசித்திரம்! - கி.வீரமணி

 தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா - முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப்படத் திறப்பு விழாவினை எதிர்க்கட்சியாகிய அ.இ.அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை!

எதிர்க்கட்சியாக செயல்படுங்கள் - எதிரிக்கட்சியாக செயல்படுவது ஜனநாயகம் ஆகாது! -  கி.வீரமணி

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவும், அதன் தனிச் சிறப்பாக 60 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து - எந்தத் தேர்தலிலும் தோல்வியே பெறாது - தொடர் வெற்றி பெற்று அமர்ந்த பெருமைக்குரிய சட்டப்பேரவையின் மதிப்புறு உறுப்பினர் என்ற எவரும் பெறாத பெருமையை அரசியல் வரலாற்றில் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப் படத் திறப்பு விழாவும், தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் தலைமையில், இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

ஜனநாயக வரலாற்றில் அழிக்கப்பட முடியாத கறை!

இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த விழாவில் முக்கிய எதிர்க்கட்சியாகிய அ.இ.அ.தி.மு.க. விழாவைப் புறக்கணித்தது; இது மிகப்பெரிய அரசியல் பிழை மட்டுமல்ல; ஜனநாயக வரலாற்றில் அக்கட்சி தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அழிபட முடியாத கறையுமாகும்!

இதுபற்றி, நீர்வளத் துறை அமைச்சரும் தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான திரு.துரைமுருகன் அவர்கள் நேற்று (3.8.2021) தலைமைச் செயலகத்தில் அளித்த செவ்வி (பேட்டி) ஒன்றில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைக் கூறி, அ.தி.மு.க.வின் பெருந்தன்மையற்ற போக்கினை அம்பலப்படுத்தியுள்ளார்.

‘‘விழாவில் கலந்துகொள்வதும் அல்லது கலந்துகொள்ளாததும் அவரவர்களுடைய விருப்பம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரை மேடையில் அமர வைக்கவேண்டும்; அவர்களுடைய ஒத்துழைப்போடு விழாவைச் சிறப்போடு நடத்தவேண்டும் என முதலமைச்சர் அவர்கள் நினைத்தார்.

விழாவை நடத்தத் திட்டமிட்டபொழுது முதலமைச்சர் அவர்கள் என்னை அழைத்து எதிர்க்கட்சித் தலைவரைத் தொடர்புகொண்டு, விழாவிற்கு வருகை தரவேண்டும் எனவும், குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் அமரும் வரிசையிலேயே தங்களுக்கும் இடம் ஒதுக்கப்படும் எனவும், தாங்கள் விழாவில் வாழ்த்துரைக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறுமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். நானும் அவ்வாறே அவரிடம் விவரங்களைக் கூறி, அழைப்பு விடுத்தேன்.

அதற்கு அவர் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து கூறுவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதை என்னிடம் கூறாமல், சட்டப்பேரவை செயலாளரிடம் ‘‘நாங்கள் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை’’ எனக் கூறியுள்ளனர்.

தி.மு.க.வுக்கோ, தி.மு.க. அரசான தமிழ்நாடு அரசுக்கோ இழப்பு அல்ல!

ஆனால், அவர்கள் கூறும் காரணம், மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் படத் திறப்பு விழாவில் தி.மு.க. பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால்,  அவர்கள் மற்றவர்களுக்கு அழைப்பு அனுப்புவதுபோலவே எங்களுக்கும் அழைப்பு அனுப்பினர். ஆனால், நாங்கள் அப்படி அல்ல - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் படத்திறப்பு விழாவில் எங்களுக்குரிய மரியாதை இல்லை என்பதால், நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நாங்கள் உரிய மரியாதையை அவர்களுக்கு அளிப்போம்‘’  என்று திரு.துரைமுருகன் அவர்கள் கூறியுள்ளார்.

பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரான, மேனாள் முதலமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், அவரது கட்சிக்கும்தான் இது இழப்பே தவிர, தி.மு.க.வுக்கோ, தி.மு.க. அரசான தமிழ்நாடு அரசுக்கோ இழப்பு அல்ல.

படத் திறப்பு விழா என்பது மட்டுமல்ல - தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூறாண்டு தொடக்க விழாவும் இணைந்த விழா.

அதில் கலந்துகொள்ளும் முக்கிய விருந்தினர் - இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தலைமை தாங்குபவர் தமிழ்நாடு ஆளுநர்!

முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்வு, அரசியல் முதிர்ச்சியின்மை!

இப்படிப்பட்ட அதிமுக்கிய விழாவில் கலந்துகொண்டு, அவரும் அவர்களது நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரே, ‘தலைவர்’ என்று இறுதிவரை மரியாதையுடன் அழைத்த திராவிடர் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவரான கலைஞரின் படத் திறப்பு விழாவை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணித்தது - முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்வாலும், அரசியல் முதிர்ச்சியின்மையாலும்தானே!

கலந்து கொண்டிருந்தால், அவரது பெருமை, அவரது கட்சியின் மரியாதை ஒருபடி வளர்ந்திருக்கும் - ஜனநாயக மரபுப்படி!

ஆனால், ஏனோ அதைப் பெறத் தவறியதால், இழப்பு தி.மு.க.விற்கு அல்ல - அ.தி.மு.க.வுக்கும் - எதிர்க்கட்சித் தலைவருக்கும்தான்!

கலந்துகொள்ளக் கூடாது என்ற முடிவுக்கான, சரியான காரணங்களைக்கூட முறையாகத் தெரிவிக்க முடியாத தடுமாற்றம்- முரண்பட்ட பதில்கள் அவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டிவிட்டது!

1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியது என்பதே தவறு என்று ஒரு வாதத்தைக் கூறி, ‘Legislative Council’ என்பது சட்டப்பேரவை தொடக்கம் அல்ல என்பது போலவும், 1937 தான் தொடக்கம் என்றும் கூறி, தங்களது ‘வரலாற்று அறிவை’ அம்பலப்படுத்திக் கொண்டது அக்கட்சி. தனது ‘திராவிட’ என்ற பெயரை உள்ளடக்கியிருப்பதைக்கூட தக்க வைத்துக் கொள்ளத் தகுதியையும், பக்குவத்தையும் பெறவில்லை என்பதையே காட்டுகிறது.

காலத்தால் அழியாத கல்வெட்டுகள்!

1921-லிருந்து 1937-க்கு வரை சென்னை ராஜதானியின் பிரதம அமைச்சராக கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்), பனகால் அரசர், பொப்பிலி அரசர், டாக்டர் சுப்பராயன், பி.டி.இராஜன் போன்றவர்கள் காலத்தில் நடந்த பல்வேறு வரலாற்றுப் பெருமைக்குரிய சட்ட அமுலாக்கங்கள், அரசு ஆணைகள் காலத்தால் அழியாத கல்வெட்டுகள்!

  • ஹிந்து அறநிலைய மசோதா
  • மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதத் தகுதி ஒழிப்பு
  • ஆதிதிராவிட தோழர்கள் தெருக்களில் நடமாடும் உரிமை ஆணைகள் 
  • வகுப்புரிமை ஆணைகள் (1924)
  • புதிய பல்கலைக் கழங்கள் தோற்றுவித்தல் (ஆந்திரா, அண்ணாமலை)
  • பெண்களுக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக வாக்குரிமை

இப்படிப் பல பல!

இவற்றைப்பற்றியாவது தெரிந்துகொண்டிருப்பார்களா என்பது நமக்குத் தெரியவில்லை!

இவற்றைவிட்டு, 1937 முதல்தான் தொடக்கம் எனக் கணக்கிட்டுக் கொண்டாடச் சொல்வது குறித்து எப்படிச் சிரிப்பது என்றே தெரியவில்லை!

கோட்டையில் கொடியேற்றும் உரிமை யாரால் என்பதை மறக்கலாமா?

முத்தமிழறிஞர் கலைஞர் தான், தமது ஆட்சியில் மாநில முதலமைச்சர்களுக்குக் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை (ஆகஸ்ட் 15 இல்) பெற்றுத் தந்த சரித்திரச் சாதனை புரிந்தவர். இ.பி.எஸ். கொடியேற்றும் போதெல்லாம் கலைஞர் பெற்றுத் தந்த உரிமையால்தான் கயிற்றையே பிடித்து ஏற்ற முடிந்தது - பலமுறை என்பதைக்கூட மறக்கலாமா?

‘அடகு வைக்கப்பட்டு, மீட்கப்படாத’ கட்சியாக அ.தி.மு.க. உள்ளது!

தமிழ் வாழ்த்துப் பாடுகிறார்களே, ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் மனோன்மணியாரின் பாட்டுக்கு அனைவரும் எழுந்து நின்று தமிழுக்கு மரியாதை செய்யும் பெருமையும், உரிமையும் கலைஞரின் சாதனை என்பதை ஏனோ மறந்துவிட்டு, ‘அடகு வைக்கப்பட்டு, மீட்கப்படாத’ கட்சியாக அ.தி.மு.க. உள்ளது! 

எனவே, புறக்கணிப்புக்கு நாளும் ஒரு காரணம் தேடுவது என்பதே கேலிக்கூத்தாகும்.

100 நாள்கள் கூட ஆகாத ஓர் ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் நடத்துவது எவ்வளவு விசித்திரம்!

முன்பு  முதலமைச்சராக இருந்தபோது ஈ.பி.எஸ். அவர்கள், சட்டமன்றத்திலேயே ‘‘தேர்தல் வாக்குறுதிகள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றவேண்டும் என்பதுதான்; அதற்குள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்’’ என்று கூறியது வசதியாக மறந்துவிட்டதா?

எதிர்க்கட்சியாக செயல்படுங்கள் - எதிரிக்கட்சியாக செயல்படுவது ஜனநாயகம் ஆகாது!

கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டையான தி.மு.க. ஆட்சியை நோக்கி இப்படி கல்லெறிவதால் ஏற்படும் இழுக்கு எதிர்க்கட்சி அ.தி.மு.க.வுக்குத்தான்.

எதிர்க்கட்சியாக செயல்படுங்கள் - எதிரிக்கட்சியாக செயல்படுவது ஜனநாயகம் ஆகாது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக