சனி, 14 ஆகஸ்ட், 2021

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.


 குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இன்று (2021 ஆகஸ்ட் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார். குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினரிடம் உரையாடிய குடியரசுத் தலைவர், நாட்டுக்கு வெற்றி தேடி தந்ததற்காக ஒட்டுமொத்த தேசமும் அவர்கள் குறித்து பெருமைப்படுவதாக கூறினார். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான ஒலிம்பிக் பதக்கங்களை இந்திய அணி இம்முறை வென்றுள்ளது. அவர்களது சாதனைகள் விளையாட்டில் பங்கு பெற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக கூறிய குடியரசுத் தலைவர், பெற்றோர்கள் மத்தியிலும் விளையாட்டுகள் குறித்த நேர்மறை எண்ணம் உருவாகி இருப்பதாக கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணியின் செயல்பாடுகள் சாதனைகளில் மட்டுமல்லாது திறமையிலும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். பெரும்பாலான வீரர்கள் தங்களது விளையாட்டு பயணத்தின் தொடக்கத்தில் இருக்கிறார்கள். டோக்கியோவில் அவர்கள் வெளிப்படுத்திய உணர்வு மற்றும் திறமை, வரும் காலங்களில் விளையாட்டு உலகில் இந்தியா சாதிக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

ஒட்டுமொத்த இந்திய அணியினரை அவர்களது முயற்சிகளுக்காக பாராட்டிய குடியரசுத் தலைவர், ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவர்கள் தயாராவதற்கு முக்கிய பங்காற்றிய பயிற்சியாளர்கள், ஆதரவு பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளையும் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக