செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

கரோனா ஒழிந்த பழைய கலகலப்பான - இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு முழு ஒத்துழைப்பை நமது மக்கள் தரவேண்டியது மிகவும் அவசியமாகும்!.-கி.வீரமணி



கரோனா: மூன்றாம் அலை எச்சரிக்கை கட்டுப்பாடுகளை அரசு விதிப்பது நாட்டு மக்களுக்காகத்தான் முகக்கவசம், கைகளைக் கழுவுதல் , தனிநபர் இடைவெளி  முக்கியம்! முக்கியம்!! - கி.வீரமணி

செய்வது அரசுக்காக அல்ல - நமக்குத்தான் என்பதை மறவாதீர்!

கரோனா கொடுந்தொற்று இரண்டாம் அலையை பெரும் அளவில் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசும், அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களும், குழுவினரும், பொறுப்பான மருத்துவ சேவையாளர்களும், மக்கள் நலப் பணியாளர்களும், ஒருங்கிணைந்துப் போராடி கரோனா கொடுந்தொற்று குறையும் நிலையை உருவாக்கியதோடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ள நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது பாராட்டுதலுக்குரியது.

ஆனால், அதேநேரத்தில், சில நாள்களாக தாராளமாகக் கைவிட்ட தளர்வுகள் காரணமாக கூட்டம் கூட்டமாக - மீன் வாங்கச் செல்வது முதல்  முகக்கவசம் அணிவது வரை  அலட்சியமாய் இருப்பதனால் மறுபடியும் கரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் - குறிப்பாக சென்னையின் சில பகுதிகளிலும் பெருக ஆரம்பித்திருப்பது  மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது!

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை!

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி தொலைக்காட்சிகள்மூலம் அறிவுறுத்துவதுபோல், என்னதான் அரசுகள் முயற்சி எடுத்தாலும், மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டுமே இதனை அறவே நீக்க முடியும் - கட்டுப்பாடுகளை அதிகமாக்கிவிட அரசை நிர்ப்பந்திக்காதீர்  என்பது முக்கியமாகும்! இன்றேல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது என்ற பழைய சொலவடைபோலவே நிலைமைகள் மோசமாகக் கூடும்.

மூன்றாம் அலை பரவும் அபாயம், டெல்டா பிளஸ் எந்த உருவிலும் மாற்றமடைந்து தாக்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைளை  நம்  மக்கள்  மனதிற்கொண்டு,  சங்கடமில்லாத வழிமுறைகளான,

1. முகக்கவசத்தைச் சரியாக அணிதல்

2. அடிக்கடி சோப்புப் போட்டு கைகளை சரியாகக் கழுவுதல்

3. தனி நபர் இடைவெளியைச் சரியாகக் கடைபிடித்தல்

4. இரண்டாவது டோஸ் ஊசி போடவேண்டியவர்கள் போட்டுக் கொண்டு - உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ளல் - இவை  எளிதானவைகளாக இருப்பதோடு, அத்திட்டங்கள் நமது பாதுகாப்புக்கும், சமூகப் பாதுகாப்புக்கும்தான் என்ற உணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டாமா?
வரும் அக்டோபர் வரைகூட இதுபோன்ற நிலைகள் இருக்கக் கூடும் - என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.

மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டியது மிகவும் அவசியம்

அமெரிக்கா போன்ற நாடுகளில் முகக்கவசம் அணிவதை வற்புறுத்தாது, சற்று தளர்வு கொடுத்ததால், மீண்டும்அங்கே பழைய மாதிரி, பாதிப்புகள் அதிகமாகும் அபாயம் பெருகும் நிலை கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா?
நம்மை நாம்தானே காத்துக் கொள்ள முடியும்? இல்லையா?

கட்டுப்பாடுகளை வலியுறுத்தி கடைகள்மூடல் என்பனவற்றை முதலமைச்சரோ, தமிழ்நாடு அரசோ கூறுவதினால் பாதிப்புகள் வணிகத் துறையிலும், மற்றவற்றிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான்.

ஆனால், வேறு வழி இல்லையே! சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும்? இன்றேல் முதலுக்கே முழு மோசம் ஏற்படும் நிலை உருவாகக் கூடுமே!

காவல்துறையின் சட்ட திட்டங்களாக கட்டுப்பாடுகளை நினைக்காமல், நம் பாதுகாப்புக்காக என்று கருதி, அரசுடன் ஒத்துழைப்போம் என்ற எண்ணத்தோடு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, கரோனா ஒழிந்த பழைய கலகலப்பான - இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு முழு ஒத்துழைப்பை நமது மக்கள் தரவேண்டியது மிகவும் அவசியமாகும்!

விதிகளை மீறமாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டால்

மக்களாட்சியில் - அதுவும் மனித உரிமைகளை மதித்து, வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்து, நாளும் மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற பெருங்கவலையும், பொறுப்பும் கொண்ட அம்சமே இந்தக் கட்டுப்பாடுகள் என்பதை அனைத்துக் கட்சியினர்,  அனைத்து மதத்தினர், அனைத்துப் பிரிவினரையும் உணர வைத்து, விதிகளை மீறமாட்டோம் என்று உறுதியாய் செயல்பட்டால், கரோனாவை விரட்டி விட முடியும்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் - லால்குடி பகுதியில் பெரியார் உலகம் பணிகளைப் பார்க்க  சில வாரங்கள் முன்பு சென்றிருந்தோம். பல கிராமங்களில் முகக்கவசம் இல்லாமல்   மக்கள் காட்சியளிப்பதை நேரில் கண்டு வேதனைபட்டோம்.

கழகத் தோழர்கள் முகக்கவசம் வழங்கி பிரச்சாரம் செய்யுங்கள்!

செயல் திறனும், சமூக அக்கறையும் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்மிகு திரு.சிவராஜன் அய்.ஏ.எஸ்., அதுபோலவே, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி, ஆர்.டி.ஓ., போன்ற பல திறன்பட கடமையாற்றும் அதிகாரிகள் நிர்வாகம் செய்யும் மாவட்டத்தில், மக்கள் ஒத்துழைப்பு தந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்வரவேண்டாமா? கழகத் தோழர்களும் முகக்கவசம் வழங்கி, பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள்! நல வாழ்வு  முக்கியம்! முக்கியம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக