புதன், 18 ஆகஸ்ட், 2021

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பாமக மேற்கொண்ட முயற்சிகளும், பறிக்கப்பட்ட அதன் வெற்றியும்!.- DR.S.ராமதாஸ்


 தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பாமக மேற்கொண்ட முயற்சிகளும், பறிக்கப்பட்ட அதன் வெற்றியும்!

இந்தியா விடுதலையடைந்த நாளில் இருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வருகின்றன. பல நேரங்களில் நீதிமன்றங்களும், மத்திய, மாநில அரசுகளும் கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பரிந்துரைத்துள்ளன. ஆனால்,  பல்வேறு காரணங்களால் அவை சாத்தியமாகவில்லை.  ஆனாலும், கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தான் இதில் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 69%  இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது குறித்தும், அந்த  ஆணையை நிறைவேற்ற அப்போதைய கலைஞர் அரசுக்கு அனைத்து சமுதாயத் தலைவர்களைத் திரட்டி நான் கொடுத்த அழுத்தங்கள் குறித்தும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கலைஞர் அதை செய்யத் தவறியது குறித்தும் எனது நேற்றைய முகநூல் பதிவில் விளக்கியிருந்தேன்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிடுவதற்கு முன்பாகவே தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தச் செய்வதற்கான நடவடிக்கைகளை பா.ம.க.  மேற்கொண்டு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால், அதிகாரிகள் செய்த சதியாலும், 2001-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாலும் அந்த வாய்ப்பு கைகூடவில்லை.

அதனால் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்திவிட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக இருந்தது. 2007-08 ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான பணிகளை அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொண்டார். இதற்காக பிற்படுத்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய அவர், 2008-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீல் அவர்களும் அப்போது ஒப்புக்கொண்டார்.

அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது பா.ம.க.வின் கோரிக்கைக்கு லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை  2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார். 

அதைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்  2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி  மக்களை ஏமாற்றியது. அப்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்  விவரங்களும் வெளியிடப்படவில்லை. அதனால், கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் நோக்கமே சிதைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக