வியாழன், 13 மே, 2021

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையை எட்டிவிட்டதால், முழு ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.- DR.S.ராமதாஸ்

கொரோனா: பன்னாட்டு நிபுணர் குழு அறிக்கை காட்டும் வழிகள்

உலக சுகாதார அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட, கொரோனா படிப்பினைகளுக்கான பன்னாட்டு நிபுணர் குழு The Independent Panel for Pandemic Preparedness & Response (IPPPR) அறிக்கை புதன் கிழமை (12.05.2021) வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து உலக நாடுகளின் தலைவர்கள் செயல்பட்டிருந்தால், இதுவரை 33 லட்சம் பேரை கொன்றுள்ள இந்த கோவிட்- 19 பேரழிவை தொடக்கத்திலேயே தடுத்திருக்க முடியும் என்பதை இந்த அறிக்கை ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளது.

மேலும், கோவிட்- 19  போன்ற இன்னொரு பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கான அறிவியல் பூர்வமான வழிமுறைகளையும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பொதுச்சுகாதார கோரிக்கைகளை முழு வீச்சில் நடைமுறை படுத்திய நாடுகள் இழப்புகளை பெருமளவு தடுத்துள்ளதாகவும் இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. கூடவே, அடுத்த பேரழிவு நடக்காமல் தடுப்பது 'ஒரு அரசியல் நடவடிக்கை' என்றும் தெளிவு படுத்தியுள்ளது.

பன்னாட்டு நிபுணர் குழு குறிப்பிட்டுள்ள சில அவசர நடவடிக்கைகள் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். அவை:

1. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும்.

(பரிசோதனையில் அதிகப்படியானவர்களுக்கு கொரோனா கண்டறியப்படும் இன்றைய சூழலில், இதை விட ஏராளமான தொற்றாளர்கள் பரிசோதனையே செய்யாமல் இருப்பார்கள் என்பதே தமிழகத்தின் சூழலாக இருக்கும். எனவே, உடனுக்குடன் கொரோனா தொற்றுள்ள எல்லோரையும் கண்டறிவதன் மூலமே தொற்றுப்பரவலை குறைக்க முடியும்).

2. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய எல்லோரையும் கண்டறிந்து பரிசோதனை செய்து, தொற்றுள்ளவர்களை தனிமைப் படுத்த வேண்டும்.

(தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் - கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக தேடி சோதனை செய்தார்கள். இப்போது அவ்வளவு தீவிரமாக தேடுகிறார்களா என்பது சந்தேகமே)

3. முகக்கவசம் அணிவதை தீவிரமாக்க வேண்டும்.

(அதிகமான விழிப்புணர்வு விளம்பரங்கள், தண்டம், அரசு சார்பான எல்லோரும் முன்மாதிரியாக நடத்தல் என பல வழிகளிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்).

4. சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

(தமிழ்நாட்டில் சமூக இடைவெளியின் முக்கியத்துவம் அவ்வளவாக இன்னமும் உணரப்படவில்லை, கடைகள், மீன் சந்தைகள் என பல இடங்களிலும் இன்னமும் முறையான சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்படவில்லை. அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் கூட நெருக்கமாக நின்றுதான் காட்சியளிக்கிறார்கள்)

5. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட வேண்டும்.

(தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் 70% மக்களுக்கும் ஒரு முறையாவது தடுப்பூசி போடுவதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் - செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 தமிழக மாநிலம் உருவான நாள் - போன்று ஏதேனும் ஒரு நாளை இலக்காக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 31 ஆம் நாளுக்குள் 70% மக்களுக்கு 2 முறை தடுப்பூசி போடப்படுவதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும்.)

மேற்கண்ட நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் உடனடியாக செயலாக்க வேண்டும் என பன்னாட்டு நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளின் படிப்பினைகள் என அக்குழு தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் கூடுதல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் தீவிர சூழலில் மிகவும் அவசியமானவை ஆகும்.

6. முழு அடைப்பை தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும்

(முழு அடைப்பு என்பது கொரோனா தீவிரத்தை தணிக்கும், தள்ளிப்போடும் செயல்தானே தவிர, அதுவே தீர்வு அல்ல. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையை எட்டிவிட்டதால், முழு ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்)

7. பொருளாதார உதவிகளை அளிக்க வேண்டும்

(முழு அடைப்பும், கொரோனா கட்டுப்பாடுகளும், மக்களின் வாழ்வாதார தேவைகளுக்கான நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே பயன் தரும். எனவே, அடுத்த மூன்று மாத காலத்திற்கு குடும்ப அட்டைக்கு தலா 5000 ரூபாய் வீதம் அளிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறான நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் தான் பலனை அளிக்கும்.)

மொத்தத்தில், அடுத்த ஓரிரு மாதங்கள் மிக நெருக்கடியானவையாக மாறலாம். மேலும், இதற்கு அடுத்ததாக 3 ஆவது அலை எழாமல் தடுக்கும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. எனவே, உடனடி தேவையில்லாத இதர பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அரசு கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புகள் என எல்லோரையும் இப்பணியில் ஒருங்கிணைத்து விரைவாக செயலாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக