திங்கள், 19 ஜூலை, 2021

தென்னாப்பிரிக்க கலவரம்: தமிழர்களை காக்க ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்! - கி.வீரமணி



தென்னாப்பிரிக்க கலவரம்: தமிழர்களை காக்க ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்! - கி.வீரமணி

தென்னாப்பிரிக்காவில், அந்நாட்டின் மேனாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெடித்துள்ள கலவரம் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கலவரங்களின் போது தமிழர்களும், அவர்களின் உடைமைகளும் தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

தென்னாப்பிரிக்க அதிபராக 2009 முதல் 2018 காலத்தில் பணியாற்றிய ஜேக்கப் ஜூமா மீதான ஆயுத பேர ஊழல் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர் நிற்கத் தவறியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி ஜேக்கப் ஜூமா  கடந்த வாரம்  கைது செய்யப்பட்டு சிறையில்   அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களில் வெடித்த வன்முறை கலவரமாக மாறியிருக்கிறது. அடுத்தடுத்த நாள்களில் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், நாளுக்கு நாள் கலவரம் அதிகரித்து வருகிறது.

தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக சொத்துகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன

கடந்த ஒரு வாரமாக தொடரும் கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தென்னாப்பிரிக்கக் கலவரத்தில் கவலையளிக்கும் விடயம் என்னவெனில் அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களும், அவர்களின் வணிக சொத்துகளும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன என்பது தான். இதைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ,
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான டர்பனை தலைநகரமாகக் கொண்ட சுவாசூலுநாடால் மாகாணம் தான் ஜேக்கப் ஜூமாவின் சொந்த மாநிலமாகும். அந்த மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. அம்மாநிலத்தில் உள்ள சாட்ஸ்வொர்த், ஃபோனிக்ஸ், டோன்காட், பாம்வியூ, சாஸ்திரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவில் கலவரங்கள் நடந்து வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்களும், வீடுகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஒரு வார காலமாக  உண்ண உணவு கூட கிடைக்கவில்லை

இந்தியாவுக்கு வெளியில் ஒரே நகரத்தில் 10 லட்சம் தமிழர்கள் வாழும் நகரம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரமாகும். அனைவரும் இந்தியாவிலிருந்து சென்ற இந்திய தமிழர்கள். இவர்கள் இன்றளவும் மொழி, பண்பாடு பேணி பாதுகாத்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த ஒரு வார காலமாக உண்ண உணவு கூட கிடைக்கவில்லை. பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும்படி தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு பேசிய பிறகும், கலவரம் தொடர்வதுதான் கவலையளிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் எப்போது கலவரம் வெடித்தாலும், அதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான். கவாதசூலு நடால் உள்ளிட்ட தென்னாப்பிரிக்காவின் பல மாநிலங்களில் இந்தியர்கள் வணிக ரீதியாக வலிமையாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் இத்தகைய தாக்குதல்களை அங்குள்ள சிலர் தூண்டி விடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இனியும் தொடரக்கூடாது!

தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டம், இனவெறிக்கு எதிரான போராட்டம். தென்னாப்பிரிக்க விவசாயம் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்திலும் இந்தியர்களின் பங்கு, குறிப்பாகத் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதற்காக கொண்டாடப்பட வேண்டியவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது.

இந்தியா சார்பில் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை அனுப்பி இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராக குறி வைத்து நடத்தப்படும் கலவரத்தை ஒடுக்கும்படி தென்னாப்பிரிக்காவிடம் ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். 

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை

நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் இது குறித்து இரண்டு நாள்களுக்கு முன்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம அமைச்சர் அவர்களையும், வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து, தென் ஆப்பிரிக்கா தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களது உடைமைகளைப் பாதுகாக்கவும், உணவு கிடைக்கவும் வழி வகை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திட வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக