புதன், 4 ஆகஸ்ட், 2021

விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்தப் புகார்கள் பற்றியத் தகவல்களை இந்திய விலங்குகள் நல வாரியம் பராமரிக்கிறது.-மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்தப் புகார்கள் பற்றியத் தகவல்களை இந்திய விலங்குகள் நல வாரியம் பராமரிக்கிறது. இந்திய விலங்குகள் நல வாரியத்திற்குக் கிடைக்கும் புகார்கள் தக்க நடவடிக்கைக்காக தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கு அனுப்பப்படுகின்றன.

2014-15-ம் ஆண்டு 155 புகார்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 2015-16-ல் 228 புகார்களும், 2016-17-ல் 256 புகார்களும், 2017-18-ல் 225 புகார்களும், 2018-19-ல் 144 புகார்களும், 2019-20-ல் 300 புகார்களும், 2020-21-ல் 383 புகார்களும், 2021-22-ல் ஜூலை 25 வரை 210 புகர்களும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எளிதில் அழுகக்கூடிய பொருளான மீன்களின் விலைகள், தேவை, மீன் வரத்து அளவு, வகைகள், பருவம், நுகர்வுத் தன்மை, பகுதி உள்ளிட்ட பல்வேறு சந்தை தொடர்பான காரணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

மீன் சந்தை விலை தகவல் அமைப்பை தேசிய மீன்வள வளர்ச்சி வாரியம் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு முக்கியச் சந்தைகளில் இருந்து மீன் விலைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தேசிய மீன்வள வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் வாரமொருமுறை ஆய்வறிக்கை பதிவேற்றப்படுகிறது. இதன் மூலம் மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குச் சிறப்பான சந்தைமயமாக்கலும், நுகர்வோருக்குச் சிறப்பான அணுகலும் கிடைக்கின்றன.

இந்திய கடல்பகுதிகளில் மீன்பிடித்தலை ஊக்குவிப்பதற்காக தேசிய கடல்சார் மீன்வளக் கொள்கை, 2017-ஐ அரசு அறிவித்தது. நீடித்த வளர்ச்சி, மீனவர்களின் சமூகப்-பொருளாதார மேம்பாடு, மானிய கோட்பாடு, கூட்டு, தலைமுறைகளுக்கிடையே சமதளம், பாலின நீதி மற்றும் முன்னெச்சரிக்கை அணுகல் ஆகிய ஏழு தூண்களின் அடிப்படையில் தேசிய கடல்சார் மீன்வளக் கொள்கை, 2017 அமைந்துள்ளது.

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து வருடங்களுக்கு ரூ 20,050 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மத்சய சம்பதா யோஜனா எனும் முன்னணி திட்டத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் மீன் தொழிலாளர்களுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக