சனி, 3 ஜூலை, 2021

சென்னை அய்.அய்.டியா - ‘‘அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜியா?’’ பார்ப்பனரல்லாத மாணவர்கள் தற்கொலை, ஆசிரியர்கள் பணிவிலகல் குறித்து விசாரணை தேவை! - கி.வீரமணி

 சென்னை அய்.அய்.டியா - ‘‘அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜியா?’’

பார்ப்பனரல்லாத மாணவர்கள் தற்கொலை - ஆசிரியர்கள் பணிவிலகல் குறித்து விசாரணை தேவை!

விரைவில் பெரும் போராட்டம் நடத்தப்படும்! - கி.வீரமணி

அய்.அய்.டி. என்றாலே இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அல்ல; ‘‘அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜி'' என்று சொல்லுவதே பொருத்தமாகும் என்று பலமுறை சுட்டியுள்ளோம்!

400 பேருக்குமேல் பார்ப்பன ஆசிரியர்கள்!

அங்கு 427 பேர் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால்,  தாழ்த்தப்பட்டவர்கள் வெறும் இருவரே, இதர பிற்படுத்தப்பட்டோர் 20 பேர்; மீதி 400-க்கு மேற்பட்டோர் பச்சைப் பார்ப்பனர்கள் என்பது எத்தகைய அநீதி!  'பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை' என்ற பழமொழியே உண்டு - பார்ப்பனக் கோரத்தாண்டவம்!  

இந்தியா முழுவதும் உள்ள அய்.அய்.டி.,களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என்று கூறப்படுகிறது! தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 1973 முதல்தான் செயல்பாட்டில் உள்ளது. பெரும்பாலும் ஒரு பெரிய அக்கிரகாரமாகவே நடைமுறையில் இருக்கிறது.

பார்ப்பனர் அல்லாதாரைப் பாகுபடுத்தியும், தனிமைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பார்க்கும் போக்குகள் - இந்த 2021 ஆம் ஆண்டிலும் நடக்கின்றன என்றால், இதனை எப்படி அனுமதிப்பது, சகிப்பது?

தற்கொலையும் - பணி விலகலும்!

இரண்டாண்டுகளுக்கு முன் பாத்திமா லத்தீப் என்ற மாணவி அய்.அய்.டி. வளாகத்தில் 'மர்ம'மான முறையில் மரணமடைந்தார்.

இரண்டு நாட்களுக்குமுன் சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் பகுதி நேரப் பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் (வயது 30) உடல் கருகிய நிலையில், அய்.அய்.டி. வளாகத்திற்குள் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் கிடந்தது.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே சென்னை அய்.அய்.டி.யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய விபின் தன் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள காரணம் சமூகநீதியாளர்களின் குருதியைக் கொதிப்பேறச் செய்கிறது.

ஜாதி ரீதியான பாகுபாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதால், தம்மால் அங்கு பணிபுரிய இயலாத நிலை உருவாகிவிட்டது என்று ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சாதாரண  ஒன்றாக எண்ணிடவோ, எடுத்துக்கொள்ளவோ முடியாது, கூடாது!

முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்!

இதன்மீது உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் - தொடர்ந்து இப்படி ஜாதிவெறிப் பாகுபாட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் உயிர்ப் பலியாவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்; குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படவேண்டும் - உரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.

‘மாணவராக’ நுழைந்து - ‘பிணமாக’த் திரும்புவதா?

உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற கனவோடு அய்.அய்.டி.க்குள் நுழைவோர் பிணமாக வெளிவருவது - வேதனைக்குரியது - வெட்கப்படத்தக்கது!

சென்னை அய்.அய்.டி. வளாகமே தனிப் பார்ப்பனத் தீவாக காட்சியளிக்கிறது. அதன் நிர்வாகம் முழுக்க முழுக்க மனுதர்மத்தின் மூர்க்க வடிவமாகவே காணப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களின் சமூகநீதிப் பார்வை- அதன்மீது பாய்ந்திடவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதில் அய்யமில்லை.

அதிர்ச்சித் தகவல்!

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 வரை இந்தியாவில் உள்ள அய்.அய்.டி.களில் தற்கொலை செய்து கொண்ட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை கேட்டு ஒன்றிய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுர் என்பவர் மனு அளித்திருந்தார்.

இதற்கு அய்.அய்.டி. நிர்வாகம் அளித்த பதிலில் இந்தியாவில் உள்ள அய்.அய்.டி.களில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சென்னை அய்.அய்.டி. (7 பேர்) முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் காரக்பூர் (5), டில்லி, அய்தராபாத் (தலா 3), மும்பை, கவுகாத்தி, ரூர்க்கி (தலா 2), வாரணாசி, தன்பாத், கான்பூர் (தலா 1) ஆகிய அய்.அய்.டி.கள் உள்ளன.

சென்னை அய்.அய்.டி.யில் மட்டும் 2010-2019 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 14 மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் தற்கொலைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

என்னே கொடுமை! இதில் பல்வேறு உளவியல் காரணங்கள் எனக் கூறப்பட்டாலும் ஜாதிவெறி, மத ரீதியான ஆதிக்க அழுத்தங்களே அதிகளவு காரணங்களாக இருந்துள்ளன.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்குத் தடை!

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்யவில்லையா? பெரும் போராட்டக் கனலுக்குப் பிறகுதானே பணிந்து வந்தனர்.

சென்னை அய்.அய்.டி.,யில் உள்ள உணவு விடுதியில் புலால் உணவு - காய்கறி உணவு, நுழைவு வாயில்கள் தனித்தனி மட்டுமின்றி, கைகழுவும் இடங்கள்கூட வெவ்வேறு என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

மீண்டும் ஒரு சேரன்மாதேவி!

வெளியில் இருந்து வரும் ஆசிரியர்கள் புலால் உணவு கொண்டுவரக்கூடாது என்று மறைமுக உத்தரவாம்!

1924 இல் சேரன்மாதேவியில் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தை 2021-லும் சென்னை அய்.அய்.டி.,யில் நடத்தவேண்டுமா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிப்பு - சமஸ்கிருதப் பாடல் அரங்கேற்றம்!

ஒன்றிய அரசு சார்பில் தேசிய துறைமுகம், நீர் வழிகள், கடலோரத் தொழில்நுட்ப மய்யம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை அய்.அய்.டி., வளாகத்தில் நடைபெற்றது (26.2.2018).

அந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத் துறை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். அந்த அரசு விழாவில், என்ன நடந்தது? அரசின் சட்டப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப் பெறாமல், சமஸ்கிருதப் பாடலைப் பாடவில்லையா?

இரு ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் நடைபெற்ற சட்ட மீறல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

வஞ்சிக்கப்பட்ட பேராசிரியர் வசந்தா கந்தசாமியும் - முதலமைச்சர் கலைஞரின் பதிலடியும்!

பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள் உலகம் போற்றிய கணிதப் பேராசிரியர். அவர் பார்ப்பனர் அல்லாதார் என்ற ஒரே காரணத்துக்காக எப்படி எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தார்கள்?

 அவருக்கு முறையாக வந்து சேரவேண்டிய பதவி உயர்வுகள் கிடைத்தனவா?

அவருக்காக எத்தனை எத்தனையோ களப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடந்தன?

இவற்றை எல்லாம் மனதிற்கொண்டுதான் முதலமைச்சராகவிருந்த முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் மானமிகு வசந்தா கந்தசாமி அவர்களுக்கு "கல்பனா சாவ்லா விருது" அளித்துப் பாராட்டினார்.

அது, அய்.அய்.டி. பார்ப்பன வட்டாரத்துக்குக் கொடுக்கப்பட்ட சூடு என்பதைப் பொது அறிவு அவர்களுக்கு இருந்திருந்தால் புரிந்திருக்கும்.

பெரியார் மண்ணில் போராட்டம் வெடிக்கும்!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணில், ஓர் அரசு நிறுவனம் அசல் பார்ப்பனத் தர்பாராக, மனுநீதித் துரைத்தனமாக நடந்துகொண்டுள்ளதை இனியும் அனுமதிக்க முடியாது - கூடாது! *விரைவில் சமூகநீதி மண்ணின்  குணத்தைக் காட்டும் வகையில் போராட்டம் நடத்தப்படும்* என்று தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்று திரட்டப்படுவார்கள், தொடர் போராட்டங்களாக நடைபெறும்.

இதற்கிடையே சென்னை அய்.அய்.டி.யில் தொடர்ந்து நடைபெறும் தற்கொலைகள், பதவி விலகல்கள் குறித்து உரிய வகையில் விசாரணை ஒன்றினைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக