வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

கடமை தவறிய ஆளும்கட்சியால் கண்ணியம் தவறிய எதிர்க் கட்சிகள்! ஆளும் கட்சியின் வீண் பிடிவாதத்தால் வீணடிக்கப்பட்டது ரூ 120 கோடி! - டாக்டர் K. கிருஷ்ணசாமி



களேபரம் ஆன நாடாளுமன்றம்! கண் கலங்கிய வெங்கையா அவர்கள்!!

கடமை தவறிய ஆளும் கட்சி!  கண்ணியம் தவறியதா எதிர்க் கட்சிகள்?

வேளாண் சட்டம்-பெகாசஸ் உளவு - விவாதிக்க வீண் பிடிவாதம் வீணடித்த ரூ 120 கோடி! - டாக்டர் K. கிருஷ்ணசாமி
 
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அவைத்தலைவர் கண்கலங்கிய சம்பவம் நேற்றைய தினம் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. ஜீலை 19 ஆம் தேதி துவங்கிய மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நேற்றைய தினம் (11.08.2021) மேலவையின் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கண்கலங்கி முடித்து வைத்தது 75 வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்நேரத்தில் 140 கோடி மக்களின் கண்களை திறந்து வைத்திருக்கிறது.

இந்திய நாடாளுமன்றங்களை வெறும் கட்டிடங்களாக மட்டும் பார்க்கக் கூடாது. அது 140 கோடி மக்களுடைய நாடிகளிலும், நரம்புகளிலும் மிளிரவேண்டிய உணர்வின் இருப்பிடம் ஆகும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுதந்திரமாக வாக்களித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய அவையில் பல சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டுவந்து எவருடைய தூண்டுதலோ, அழுத்தமோ, அச்சுறுத்தலோ இல்லாமல் நமக்கு நாமே ஆட்சி செய்து கொள்வதை  நமது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையாகவும், அதை நிறைவேற்றித் தரக்கூடிய ஆலயமாகவும் விளங்குவதே நாடாளுமன்றங்கள். இந்த நாடாளுமன்ற அவைகள் திடிரென்று நம்மீது குதித்து விடவில்லை. இலட்சோபலட்சம் இந்திய மக்களுடைய  350 ஆண்டுக்கால அர்ப்பணிப்பாலும், உயிர்த் தியாகங்களாலும், உழைப்புகளாலும் எழுந்த மாமன்றங்கள் அது.

இராணுவ ஆட்சி முறை, சர்வாதிகார ஆட்சி முறை, அதிபர்களுடைய ஆட்சி முறை, கம்யூனிச  ஆட்சி முறை என்று உலகில் எவ்வளவோ ஆட்சி முறைகள் உண்டு.  ஆனால், இருக்கின்ற ஆட்சி முறைகளிலேயே சிறந்தாக கருதப்படக் கூடிய ஜனநாயக ஆட்சி முறையை நாம் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். எந்த பிரச்சினைகளையும் பேசியும், விவாதம் செய்தும் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நேரடியாக மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்களைக் கொண்டது மக்களவை எனவும், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும், நியமனங்கள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர்களை கொண்டது மேலவை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு அவைகளும் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்குச்  சட்டங்களும் உண்டு, முன் உதாரணங்களும் உண்டு. கடந்த 75 ஆண்டுகாலமாக இதே நடைமுறைகள் தான் பின்பற்றப்பட்டு வருகின்றன.

வாக்குகளைக் கட்சி ரீதியாகப் பெற்று, வெற்றி பெறினும், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எக்கட்சியைச் சார்ந்தவராக இருப்பினும் ஒட்டுமொத்த இந்நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக எண்ணியே செயல்பட வேண்டும். நமது நாட்டில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். அந்த கூட்டத்தொடர் காலகட்டங்களில் தான்  பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட  ஆளும் கட்சி தனது திட்டங்களைச் சட்டமாக்கும்.  ஒரு சர்வாதிகார அதிபரைக் கொண்ட நாடு என்றால் அச்சர்வாதிகாரி என்ன நினைக்கிறாரோ  அது ஒரே உத்தரவில் அன்றே அமலுக்கு வந்து விடும். அங்குக் கேள்விக்கும் இடமில்லை; விவாதத்திற்கும் வாய்ப்பில்லை. ஆனால் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு சட்டமும் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அந்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து விளக்க வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்கும், அதே சமயத்தில் அந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டி காண்பித்தற்கும், ஒரு வேளை அந்த  சட்டம் மக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதை முற்றாக நிராகரிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் உரிமையும், கடமையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு.

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இம்மழைக்கால கூட்டத்தொடரில் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் பெரிய அளவிற்குப் பேசும் பொருளாக இருந்தன. ஒன்று கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தது; இரண்டாவது இஸ்ரேல் நாட்டின் உளவு செயலி ‘பெகாசஸ்’ மூலம் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் ஈட்டுப்பட்டுள்ள பலரது கைப்பேசிகள் மற்றும் தொலைபேசிகளை உளவு பார்த்தது. இந்த இரண்டு விசயங்களுமே நாடாளுமன்றத்தில் பெரிய அளவிற்கு எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் என்பது முன்பே ஆளும் பாஜக அரசுக்கு நன்கு தெரிந்திருக்கும். எனவே, நாடாளுமன்றத்தில் அவை பெரிய அளவிற்கு எழுப்பப்படாமல் இருக்க வேண்டும் என்று  இந்த அரசு  கருதி இருந்தால், எதிர்க்கட்சிகளை முன்கூட்டியே அழைத்துப் பேசி,  அச்சட்டங்களின் உண்மைத்தன்மையையும்; ’பெகாசஸ்’ குறித்த உண்மை நிலையையும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பாஜக அதற்குண்டான எந்த முயற்சியும் முனைப்புடன் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒப்புக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தும்,  ஒரு அமைச்சரை வைத்து எவ்வித விவாதமுமில்லாமல் ஒரு அறிக்கையும் நாடாளுமன்றத்திலே வாசிக்கப்பட்டது. பாஜக அரசின் இந்த அணுகுமுறையே எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கவும், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்ற மனநிலைக்கும் தள்ளி இருக்கக்கூடும். அதன் விளைவாகவே கடந்த 19 ஆம் தேதி துவங்கிய கீழவையும் முறையாக நடைபெறவில்லை; மேலவையும் முறையாக நடத்திட அனுமதிக்கப்படவில்லை.

இந்த மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்ற 24 நாட்களில் 76 மணி நேரம் இந்த அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை வெறும் மணித்துளிகள் என்று மட்டும் பார்த்து விடக்கூடாது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கிவிட்டால் அவை நடக்கிறதோ? இல்லையோ? ஒரு நிமிடம் கடந்து விட்டாலே மக்களின் வரிப் பணம் இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் காலியாகி விடும். அந்த அக்கணக்குகளின்படி 76 மணி நேரம் 26 நிமிடங்களில் ஏழை, எளிய இந்திய மக்களின் வரிப்பணம் 120 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் சாதாரண மக்கள் புரிந்து செயல்படுவதற்குள் பல யுகங்கள் உருண்டோடி விடும்.

ஜனநாயகம் என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல; அது வாழ்க்கை முறை. அது ஒவ்வொரு குடிமகனுடைய உள்ளத்திலேயும், செயலிலேயும் தெளிவாக வெளிப்படக்கூடிய பண்பாடுகள் ஆகும். இதை அறிந்து வைத்துள்ள உண்மையான ஜனநாயகவாதிகளால் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செயல்பாடுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியாது. ”ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள்;  ”Sanctum Sanctorum” என்று அழைக்கப்படக்கூடிய அவையின் கர்ப்ப கிரகமாகக் கருதப்படக்கூடிய, நாடாளுமன்றத்தின் நடுநாயகமாக விளங்கும் ’Parliament Director General’  அமரும் மேஜையின் மீது ஏறி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் களேபரத்தில் ஈடுபட்டார்கள்; அவையின் மாண்பைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டார்கள்; அதையெல்லாம் கண்ணுற்ற நான் அன்று இரவெல்லாம் தூங்கவில்லை” என்று இந்தியத் துணை ஜனாதிபதி மதிப்பிற்குரிய வெங்கையா நாயுடு அவர்கள் கண்கலங்கிப் பேசியது நமக்கும் மனக் கிலேசத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

ஆனால், அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினராகச் செயல்பட்டு, நன்கு அனுபவம் கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் அவைத்தலைவராக இருக்கின்ற போதும் கூட இரண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து  பேச அவை உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்க மறுத்தது ஏன்? அது நியாயமா? என்பது தான் அனைத்து ஜனநாயகவாதிகளின் கேள்வி,  நமது கேள்வியும் கூட.  மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பது அரசின் கூற்றாக இருக்கலாம். ஆனால் அச்சட்டங்கள் தங்களுக்கு  பாதிப்பை உண்டாக்கும் என சில முக்கிய மாநிலங்களின் விவசாயிகள் கடந்த ஆறு மாத காலமாக போராட்டம் நடத்துகின்ற போது  அது குறித்து விவாதம் செய்ய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் அவையின் மாண்பு எப்படிக் குறைந்து போய் விடும்?

வேளாண் சட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அச்சட்டத்தை மத்திய அரசு விரும்பினால்  திரும்பப் பெறலாம் அல்லது விடாப்பிடியாக இருக்கலாம். அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது; அது வேறு விசயம். தலைநகரான டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகளின் போராட்டம் நடக்கின்ற போது அது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றம் நடக்கின்ற போது கூட பேச வாய்ப்பு மறுக்கப்படும் போது அவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டது அவையின் மாண்புக்கு எதிரானது என்றாலும் கூட, முழு குற்றத்தையும் நாம் அவர்கள் மீது மட்டுமே சுமத்த இயலுமா?

இஸ்ரேல் நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் ’பெகாசஸ்’ உளவு செயலியின் மூலம் இந்திய அரசியல்வாதிகள் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறார்கள்.  இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. எனவே இது குறித்து இந்திய நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு. பெகாசஸ் உளவு செயலியை இந்தியாவிற்குள் அனுமதித்தது யார்? பெகாசஸ்’ மட்டும் தான் உளவு பார்த்ததா? அல்லது வேறு செயலிகளும் உளவு பார்க்கிறதா? உள்ளிட்ட சந்தேகங்களை  எழுப்பவும், அதனுடைய உண்மைத் தன்மையை வெளிக்கொணர உரக்கக் குரல் கொடுக்கவும் எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு; அது அவர்களது கட்டாய கடமையும் கூட. இது போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில்  கட்சி பேதங்களுக்கு இடமில்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது  அவசியம். இந்தியாவினுடைய எல்லையைச் சட்டவிரோதமாக யார் எப்படிக் கடந்தாலும் அது ஆக்கிரமிப்பே. இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு. உண்மைத்தன்மையை விளக்க வேண்டியது ஆளும் தரப்பின் மீதான விதி.

1962-ல் இந்திய-சீன படையெடுப்பின் போது, சீன படைகள் இந்திய எல்லைக்குள் பல நூறு மைல்கள் உள்ளே வந்ததை அன்றைய இராணுவ அமைச்சர் கிருஷ்ணன் மேனன் மறைத்துவிட்டார் என நாடாளுமன்றத்தில் குரல்  எழுப்பப்பட்டு அவர்  ராஜினாமா  செய்ததை மறந்து விட முடியுமா?  எனவே 60 வருடங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது ஜனநாயகத்தின் கூறுகள் விரிவடைந்துள்ளன. எனவே, பெகாசஸ் உளவு செயலி இந்தியாவை உளவு பார்த்ததா? அப்படியெனில் அதை அனுமதித்தது யார்? அந்த நிறுவனத்திற்கு உண்டான நிதி ஆதாரங்கள் எப்படி வழங்கப்பட்டன? இது இந்திய அரசுக்குத் தெரிந்து நடந்ததா? அல்லது தெரியாமல் நடந்ததா? என்பன குறித்து நாடாளுமன்ற விவாதங்களை அறவே மறுப்பதை ஜனநாயக ரீதியான அணுகுமுறையாகக் கருத இயலாது.     

அதே சமயத்தில்  நாடாளுமன்ற வளாகத்திற்குள் சீருடை அணிந்த 40க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாதுகாவலர்களையும் தாக்கியதாக வரும் செய்திகள் மிகவும் அபாயகரமானது; அது குறித்த உண்மை தன்மையும் மக்களுக்கு வெளிக் கொணரப்பட வேண்டும்.

தங்களுக்கு மிகப் பெரும்பான்மை, அதிகாரம், நிதி ஆதாரம் உள்ளது. எனவே நாங்கள் விரும்பியதை எல்லாம் சட்டமாக்கிக் கொள்வோம் என ஆளும் தரப்பு கருதி   அதில் விவாதத்திற்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டைக் கொள்ளுமேயானால் அது விதாண்டாவதத்தின் அடிப்படை என்பதை  ஆளும் பாஜக எண்ணிப்பார்க்க வேண்டும்.

இரண்டு முக்கிய பிரச்சினைகளில் வலுவாக நின்ற எதிர்க்கட்சிகள் 76 மணி நேரம் அவையை முடக்கியதற்கும், அவையின் கர்ப்பக்கிரகமாகவே போற்றப்படும் மேஜையின் மீது ஏறி சட்ட நகல்களை அவைத்தலைவர் மீது எறிந்து கண்ணிய குறைவாக நடக்க முயற்சி செய்ததற்கும் பதிலாக ஜனநாயக ரீதியான வேறு வடிவங்களில் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கலாமோ? என்ற கேள்வியும் எழுகிறது.

பெரும்பான்மை கிடைத்தவுடன் அரசியல் கட்சிகள் சட்டமன்றங்களையும், நாடாளுமன்றங்களையும் தங்களது உடைமைகளாகப் பாவிக்கும் அவர்களது  சிந்தனைகள் மிக மிகத் தவறானவை. சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும் மக்களுக்குச் சொந்தமானவை; நம் அனைவரைக் காட்டிலும் மேலானவை. பேச்சுரிமையையும், எழுத்துரிமையையும், கருத்துரிமையையும் நிலைநாட்டுவது நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் எனும் கர்ப்ப கிரகங்கள் ஆகும். எனவே அந்த கர்ப்ப கிரகங்களிலேயே பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மறுக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட களேபரங்களைச் சுட்டிக்காட்டி தற்போது கண்ணீர் வடித்து என்ன பயன்?

இனிமேலாவது நாடாளுமன்றத்தின் மையப் பொருளாக இருக்கக்கூடிய விவாதங்களுக்கான வாய்ப்பு எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தங்களின் கடமையை நிறைவேற்றும் போது கண்ணிய குறைவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நடந்துகொள்ளக்கூடாது என்பதுமே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

கடமை தவறிய ஆளும்கட்சியால் கண்ணியம் தவறிய எதிர்க் கட்சிகள்!

ஆளும் கட்சியின் வீண் பிடிவாதத்தால் வீணடிக்கப்பட்டது ரூ 120 கோடி!

காலம் கடந்து கண்கலங்கி என்ன பயன்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக