வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்துறையில் இந்தியா முன்னணி நாடுகளின் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.- பிரதமர் திரு.நரேந்திர மோடி



 குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பயன்தீர்ந்த வாகனங்களை அழிக்கும் கொள்கையின் கீழ், வாகன அழிப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த அழிப்பு மையத்தை உருவாக்குவதற்கு ,அலாங் கப்பல் உடைக்கும் தொழில் நடைபெறும் விதம் குறித்த விளக்கம் கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

வாகன அழிப்பு கொள்கை இன்று தொடங்கிவைக்கப்படுவது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். குஜராத்தில் வாகன உடைப்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான முதலீட்டாளர் மாநாடு பல மட்டத்தில் வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளது. தகுதியற்ற, மாசு ஏற்படுத்தும் வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் அழித்தொழிக்க வாகன அழிப்புக் கொள்கை உதவும். ‘’ சாத்தியமான சுற்றுப் பொருளாதாரத்தை உருவாக்குவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு சுற்றுச்சூழல் பொறுப்புடன் கூடிய மதிப்பை ஏற்படுத்துவது நமது நோக்கமாகும்’’ என்று நிகழ்ச்சிக்கு முன்னர் டுவிட்டரில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.

தகுதியற்ற, மாசு ஏற்படுத்தும் வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விதத்தில் அழிக்க வாகன அழிப்பு கொள்கை உதவும். சாத்தியமான சுற்றுப் பொருளாதாரத்தை உருவாக்கி, சம்பந்தப்பட்ட அனைவருக்கும்  சுற்றுச்சூழல் பொறுப்புடன் கூடிய மதிப்பை ஏற்படுத்துவது நமது நோக்கமாகும். 

தேசிய வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்த பிரதமர், இந்தக் கொள்கை வாகனத்துறைக்கும், புதிய இந்தியாவின் போக்குவரத்துக்கும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கப்போகிறது என்றார். தகுதியற்ற வாகனங்களை அறிவியல் ரீதியில் சாலைகளில் இருந்து அகற்றி, நாட்டின் வாகன எண்ணிக்கையை நவீனமயமாக்க இந்தக் கொள்கை மிகப்பெரிய பங்கு வகிக்கும். வாகன இயக்க நவீனமயமாக்கல் பயணம் மற்றும் போக்குவரத்து சுமையைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு உதவிகரமாக இருக்கும். தூய்மையான, நெரிசலற்ற வசதியான போக்குவரத்து ஆகியவை 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு மிகவும் அவசிய தேவையான இலக்காகும்.

கழிவை செல்வமாக்கும் பிரச்சாரத்திற்கான புதிய அழிப்பு கொள்கை, சுற்றுப் பொருளாதாரத்துடன் முக்கிய தொடர்பு கொண்டதாகும் என பிரதமர் தெரிவித்தார். நாட்டின் நகரங்களில் மாசைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் நமது உறுதிப்பாட்டை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது. மறுபயன்பாட்டு கொள்கை, மறுசுழற்சி, மீட்பு ஆகியவற்றைப் பின்பற்றும் இந்தக் கொள்கை நாட்டில் வாகனத்துறை, உலோகத்துறை ஆகியவற்றில் தன்னிறைவை ஏற்படுத்தும். இந்தக்கொள்கை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்ப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

75-வது சுதந்திர தினத்தை எட்டவுள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகும் என பிரதமர் வலியுறுத்தினார். அடுத்த 25 ஆண்டுகளில், வணிகரீதியிலான உழைப்பு, அன்றாட வாழ்க்கைஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்படும் என அவர் கூறினார். இந்த மாற்றங்களுக்கு மத்தியில், நமது சுற்றுச்சூழல், நமது பூமி, நமது வளங்கள் மற்றும் நமது மூலப்பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது  இதற்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார் அவர். புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்துடன் நம்மால் பாடுபட முடியும் என்று கூறிய அவர், ஆனால், நமது அன்னை பூமியிடம் இருந்து செல்வம் கிடைப்பது நம் கைகளில் இல்லை என்று கூறினார்.

இந்தியா ஒருபுறம் ஆழ்கடல் ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், மறுபுறம் சுற்றுப் பொருளாதாரத்தை ஊக்குவித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சி என்பது நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எரிசக்தி துறையில் முன்னெப்போதும் இல்லாத பணிகள் நடைபெற்றிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்துறையில் இந்தியா முன்னணி நாடுகளின் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்த கழிவிலிருந்து செல்வம் என்ற பிரச்சாரம், தூய்மை மற்றும் தாற்சார்பு இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தக்கொள்கையின் ஒவ்வொரு வழியிலும் பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படுவது முதலாவது பயனாகும். இந்தச் சான்றிதழை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்துடன், சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இரண்டாவது பயன், பராமரிப்பு செலவு, பழுதுபார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை இதன் மூலம் மிச்சமாகும். மூன்றாவது பயன் ஆயுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. பழைய வாகனங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பெருத்த அபாயத்திலிருந்து விடுதலை. நான்காவதாக, நமது பூமியை மாசுபடுத்துவது குறையும்.

இந்தப் புதிய கொள்கையின்படி, வாகனங்கள் அதன் வயதைப்பொறுத்து மட்டும் அழிக்கப்படுவதில்லை என்பதை பிரதமர் வலியுறுத்தினார். அங்கீகரிக்கப்பட்ட, தானியங்கி பரிசோதனை மையங்கள் மூலமாக வாகனங்கள் அறிவியல்ரீதியாக சோதிக்கப்படும். தகுதியற்ற வாகனங்கள் அறிவியல்ரீதியில் அழிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள பதிவுபெற்ற இத்தகைய அழிப்பு வசதிகள், தொழில்நுட்பத்துடன் கூடிய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

இந்தப் புதிய கொள்கை அழிப்பு சார்ந்த துறைக்கு புதிய ஆற்றலையும் பாதுகாப்பையும் அளிக்கும் என பிரதமர் தெரிவித்தார். ஊழியர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலைப் பெறுவதுடன், இதர அமைப்பு ரீதியிலான பிரிவு ஊழியர்களுக்கும் இது பயன் அளிக்கும். அங்கீகரிக்கப்பட்ட அழிப்பு மையங்களின் வசூல் முகவர்களாக அவர்களால் பணியாற்ற முடியும். நமது அழிப்பு முறை பயனளிப்பதாக இல்லாததால், கடந்த ஆண்டு 23,000 கோடி மதிப்பிலான மறுபயன்பாட்டு இரும்பை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அரிய பூமி உலோகங்கள் மூலம் நம்மால் எரிசக்தியை உருவாக்க முடியவில்லை.

இந்திய தொழில்துறை தற்சார்பு இந்தியா முறையை விரைவுபடுத்துவதற்கு நீடித்த உற்பத்தியை ஏற்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். வாகன உற்பத்தி மதிப்பு சங்கிலியின் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் தேவையைக் குறைக்க இது ஒரு முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டார்.

எத்தனால், ஹைட்ரஜன் எரிபொருள் அல்லது மின் வாகனம் ஆகியவை அரசின் முன்னுரிமைகளாகும் என்று கூறிய பிரதமர், இதில் தொழில் துறையின் தீவிரப் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலிருந்து உள்கட்டமைப்பு வரை, தொழில்துறை தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான தற்சார்பு இந்தியா திட்டத்தை வகுக்குமாறு அவர் வலியுறுத்தினார். இதற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

இன்று, நாடு தூய்மையான, நெரிசல் அற்ற வசதியான போக்குவரத்தை நோக்கி நகர்ந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நிலையில், பழைய அணுகுமுறை மற்றும் நடைமுறைகளில் மாற்றம் அவசியமாகும். இன்றைய இந்தியா தனது குடிமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பை வழங்க உறுதிப்பூண்டுள்ளது. இந்தச் சிந்தனைதான் பிஎஸ்-4-ல் இருந்து பிஎஸ்-6 –க்கு மாறுவதன் பின்னணி என்று கூறி, அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக